search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
    X

    சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    திருச்சி:

    திருச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் கல்வியாண்டில் சுமார் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. ரூ.60 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டமாகும். 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற மே மாதம் வெளியிடப்படும்.

    மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாட புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களிடம் வழங்கப்படும். இந்த புதிய பாடத்திட்டத்தில் நீர் மேலாண்மை, காற்று மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கும். புதிய பாடத்திட்டமானது வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு அமைந்திருக்கும்.

    மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தி வந்த பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம் சரி செய்யப்பட்டு விட்டது. எனவே பிளஸ்-2 தேர்வு முடிவானது, திட்டமிட்டபடி மே மாதம் 16-ந்தேதி எந்தவித தாமதமும் இன்றி வெளியிடப்படும்.

    கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவினை தெரிந்து கொள்ளலாம். இதற்காக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் செல்போன் எண்களையும் வாங்கி வைத்துள்ளோம்.

    திறன் மேம்பாட்டிற்காக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறந்ததும் இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியானது இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும்.

    கோடைகால விடுமுறையின் போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் தவிர, வேறு எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×