search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, ஊட்டியில் ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி
    X

    கோவை, ஊட்டியில் ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி

    கோவை, ஊட்டியில் ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    ஊட்டி:

    உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக சந்தையில் பணப்புழக்கம் குறைவாக இருந்து வருகிறது.

    இதனால் இந்த மாநிலங்களில் பெரும்பாலான நகரங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களும் பணம் இன்றி எந்த நேரமும் காலியாக கிடக்கிறது. பணத்தை நிரப்பினாலும் 15 நிமிடங்களில் தீர்த்து விடுகிறது.

    இதே போல் தமிழகத்திலும் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை, கோவை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான ஏ.டிஎம்.களில் பணம் வருவதில்லை.

    கோவை மாநகரில் பல்வேறு வங்கிகள் சார்பில் ஏராளமான ஏ.டி.எம்.கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் நேற்று ஏராளமான ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. மிக குறைவான ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் வைக்கப்பட்டு இருந்தது.

    அங்கு வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று பணம் எடுத்து சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மண்டலத்திலும் கடந்த சில நாட்களாக பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோவை, பொள்ளாச்சி, ஊட்டி உள்பட கோவை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 250 ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம். மையங்களில் தேவையான பணத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை.

    குறிப்பாக ரூ.500 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. ரூ.100, ரூ.200 நோட்டுகளை தான் அதிகமாக வைத்து வருகிறோம். அவை சில மணி நேரத்திலேயே தீர்ந்து விடுகிறது. எனவே பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அவர்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் 500 ரூபாய் புதிய நோட்டுகளை அனுப்பி வைப்பதாக கூறி உள்ளனர். புதிய ரூபாய் நோட்டுகள் தேவையான அளவுக்கு வந்தால் தான் நிலைமை சீராகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களிலும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஊட்டி கமர்சியல் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.கள் உள்ளது. ஆனால் நேற்று அவற்றில் 3 ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் வந்தது. மற்ற 7 ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு இருந்தது.

    ஊட்டி மெயின் பஜார், அப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.கள் உள்ளது. அவற்றில் எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் இல்லை.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாதால் ஓட்டல் பில் ரூம்களுக்கு பணம் கட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×