search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கன மழை- மின்னல் தாக்கி காவலாளி பலி
    X

    நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கன மழை- மின்னல் தாக்கி காவலாளி பலி

    நெல்லை மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் காவலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    குமரி அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவ லாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

    பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நெல்லை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவில் குண்டாறு, ஆய்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. தென்காசியில் 25 மில்லி மீட்டர், ஆய்குடி-23 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    இன்று அதிகாலையில் வள்ளியூர், ராதாபுரம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    கங்கைகொண்டான் அருகே உள்ள இத்திகுளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48). இவர் நெல்லையில் உள்ள தனியார் ஓட்டலில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    மாரியப்பன் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மாரியப்பனின் மனைவி தன்னுடைய மகனுடன் அருகில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு சென்று இருந்தார்.

    மாரியப்பன் இரவில் தனது வீட்டின் பின்பக்க வாசல் அருகில் அமர்ந்து இருந்தார். அப்போது பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மாரியப்பனின் மீது திடீரென்று மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கங்கை கொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மின்னல் தாக்கி இறந்த மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் 22.9 அடி நீர்மட்டம் உள்ளது. 36.23 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. விநாடிக்கு 162.25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 19.68 அடி நீர்மட்டம் உள்ளது. 19.277கனஅடியாக நீர்வரத்து உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 80.5 அடி நீர்மட்டம் உள்ளது. 193 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×