search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உள்ளது - மாவட்ட நீதிபதி
    X

    நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உள்ளது - மாவட்ட நீதிபதி

    லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உள்ளது என்று மாவட்ட நீதிபதி கூறியுள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று 13-வது ஆண்டு சமரச நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்ப்பிரியா முன்னிலை வகித்தார். சார்பு நீதிபதி ராஜ்மோகன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    விழாவில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரையில் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது மத்திய, மாநில அரசுகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. வழக்கிட்டவர்கள் தங்கள் வாழ்நாளிலாவது அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இருக்கிற நடைமுறையில் மாற்றங்களை உச்சநீதிமன்றம் கொண்டு வருகிறது.

    உரிய நேரத்தில், உரிய விதத்தில் சரியான தீர்வு கிடைக்கப் பெறவில்லை என்றால் வன்முறைகள் பெருகுவது இயல்பாகவே அதிகரித்து விடும். அதன் விளைவாக ஒரு தேசத்தின் உள்நாட்டு சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு சீர்கெடும் ஆபத்து உள்ளது. வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அதன் மூலம் பல லட்சம் வழக்குகள் தீர்வு காண முடியாத நிலை உள்ளது.

    தற்போது சமரச மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் இந்தியாவில் உள்ள 540 மாவட்டங்களிலும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 28 ஆயிரத்து 401 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் கடந்தும் நிலுவையில் இருப்பது 6 ஆயிரத்து 729 ஆகும். 10 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பொதுமக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உள்ளது.

    அதனால் தான் மக்கள் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தீர்வு காண்பதை விட, அதிகளவில் சமரச மையத்தின் மூலம் வழக்குகள் தீர்வு காண வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு நீதிமன்ற கட்டணமும் இல்லாமல், மேல் முறையீடும் இல்லாமல் விரைவான நீதியை பெறுவதற்கு மாவட்ட மக்கள் சமரச மையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

    Next Story
    ×