search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய மழை - அணை பகுதிகளில் கொட்டி தீர்த்தது
    X

    நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய மழை - அணை பகுதிகளில் கொட்டி தீர்த்தது

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஒரு சில நாட்களில் 101 டிகிரி வரை வெயில் அடித்தது. இதனால் அனல் காற்று வீசியதால் சாலைகளில் கானல் நீர் காணப்பட்டது.

    இதற்கிடையே வங்கக்கடலில் கிழக்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் ஈரப்பதம் மிகுந்த காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்து வரும் 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதென சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, அடவிநயினார் ஆகிய நீர்பிடிப்பு பகுதிகளிலும், அம்பை, செங்கோட்டை, சிவகிரி, நெல்லை, பாளை ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பாபநாசம் பகுதியில் இன்று அதிகாலை 5மணி வரை கோடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை, பாளை, பேட்டை, சுத்தமல்லி பகுதிகளில் இன்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    பாளை பகுதியில் பெய்த கன மழையால் பிரசன்ன விநாயகர் கோவில் தெருவில் உள்ள கூட்டுறவு வங்கியை மழை நீர் சூழ்ந்தது.

    குறிப்பாக பேட்டை பகுதியில் கனமழையால் முனிசிபல் பஸ் நிறுத்தம் ரொட்டிகடை பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலை சேறும் சகதியுமாக காணப்பட்டது. சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி, மாவடி, ஆகிய இடங்களில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் களக்காடு தலையணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. நெல்லை நகரில் இன்று காலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 22.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12.48 கனஅடி நீர்வரத்து இருந்தது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 19.68 அடியாக உள்ளது. நீர்வரத்து 27.8 கனஅடியாக உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 134 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தூத்துக்குடி நகர் பகுதியில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. இதே போல் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து தூத்துக்குடியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
    Next Story
    ×