search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தில்லைநாதனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது எடுத்த படம்.
    X
    தில்லைநாதனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது எடுத்த படம்.

    திருக்கோவிலூர் அருகே மாணவன் கொலை: காவலில் எடுக்கப்பட்ட வாலிபரிடம் விடிய விடிய போலீஸ் விசாரணை

    திருக்கோவிலூர் அருகே மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தில்லைநாதனை காவலில் எடுத்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி (வயது 45). இவரது மகள் தனம் (14), மகன் சமயன் (9).

    சமயன் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த பிப்ரவரி 21-ந் தேதி ஆராயி வீட்டில் மகன், மகள் ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் இரும்பு கம்பியால் அவர்களை தாக்கிவிட்டு சென்று விட்டான்.

    இதில் சமயன் சம்பவ இடத்தில் இறந்துவிட்டான். படுகாயம் அடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். 33 நாட்களுக்கு பிறகு கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த வாலிபர் தில்லைநாதனையும் அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி அம்பிகாவையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லைநாதன் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 81 குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தில்லை நாதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

    இதையொட்டி கடலூர் சிறையில் இருந்து தில்லைநாதனை போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தில்லை நாதனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ஜூலியட்புஸ்பா அனுமதி வழங்கினார். மீண்டும் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தில்லைநாதனை திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தில்லைநாதனிடம் விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக தில்லைநாதனிடம் போலீசார் விசாரணை மேற்கொன்டனர். அவன் குற்ற செயலில் ஈடுபட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அப்போது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது எப்படி என்றும் சம்பவத்துக்கு பின்னர் அந்த இடத்தை விட்டு தப்பித்து சென்றவிதம் போன்றவை குறித்தும் போலீசார் தில்லை நாதனிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    தில்லைநாதன் புவனகிரி பகுதியில் பல பெண்களை தாக்கி நகை பறித்து சென்றுள்ளான். மேலும் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தில்லை நாதனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெள்ளம்புத்தூர் கிராமத்தில் அவன் 4 பெண்களை தாக்கி நகை பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் திருவண்ணாமலை மாவட்டதிலும் தில்லை நாதன் பல பெண்களிடம் நகை பறித்து கைவரிசை காட்டி உள்ளான். எனவே, திருவண்ணாமலை மாவட்ட போலீசாரும், தில்லை நாதனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    அவ்வாறு விசாரணை நடத்தும் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. #Tamilnews
    Next Story
    ×