search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தாவை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றியது ஏன்? - மதுரை ஆதீனம் பேட்டி
    X

    நித்யானந்தாவை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றியது ஏன்? - மதுரை ஆதீனம் பேட்டி

    நித்யானந்தாவை மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றியது ஏன்? என்பது குறித்து திருவண்ணாமலைக்கு வந்த மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி அளித்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழப்பேரவை ஆகியவை இணைந்து சமய நல்லிணக்க பெருவிழாவை நேற்று திருவண்ணாமலையில் நடத்தியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை மறுதினம் (அதாவது நாளை) அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள், உண்ணாவிரத அறப்போராட்டங்கள் நிச்சயமாக வெற்றி பெறும்.

    தமிழகத்தில் பல்வேறு ஆறு, நதிகள் உள்ளன. இவற்றில் இருக்கின்ற மற்றும் வருகின்ற தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்றால் தமிழக அரசு சார்பில் அணை கட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

    கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கர்நாடக மக்கள் ஒருபோதும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். எனவே, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்கிற கோரிக்கையை கர்நாடக மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நாம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. எல்லா வகையிலும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இதில் செவி சாய்ப்பதற்கு, உத்தரவு போடுவதற்கு மத்திய அரசிடமும், உச்சநீதிமன்றத்திலும் தான் அதிகாரம் உள்ளது. எனவே, தமிழக அரசு மட்டும் முயற்சி செய்தால் போதுமானது அல்ல. இதற்கு முழு ஒத்துழைப்பு மத்திய அரசு தர வேண்டும். மத்திய அரசு முழு முனைப்போடு இருந்து காவிரி நதிநீர் தமிழகத்திற்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

    தி.மு.க. மற்றும் மற்ற கட்சியினர் காவிரி மேலாண்மை அமைப்பதற்காக அறப்போராட்டங்கள் செய்து வருகின்றனர். அவர்களை பாராட்டுகிறேன்.



    மதுரை ஆதீனத்திற்குள் நித்தியானந்தா இனி வர முடியாது. அவர், பெங்களூருவில் இருந்து அவருடைய பணிகளை செய்ய வேண்டும். தமிழகத்தில் எங்காவது ஒரு மடத்தில் மடாதிபதியாக அமர வேண்டும் என்று நினைப்பது தவறானது. அவர் எந்த மடத்திற்கும் மடாதிபதியாக வர முடியாது. நித்தியானந்தா சைவ சித்தாந்த மரபுகளை கடைப்பிடிக்கவில்லை. மேலும் அவர் தன்னையே கடவுள் என்று கூறினார். அதனால் அவரை மதுரை ஆதின மடத்தில் இருந்து வெளியேற்றினோம்.

    ஆன்மிகம் இல்லாமல் அரசியல் இல்லை. அரசியல் இல்லாமல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் கலந்தது தான் அரசியல். ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மத்திய அரசை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொன்னால் மோடி அரசில் பக்தி உள்ளது என்பது மட்டுமல்ல. மத்திய அரசின் உதவியின்றி, ஒத்துழைப்பின்றி ஒரு மாநில அரசு செயல்பட முடியாது. அ.தி. மு.க. அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்போடு உள்ளது. மேலும் ஆதரவாக உள்ளது. அதனால் தான் மத்திய அரசை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு நிச்சயமாக மேற்கொள்ளும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews
    Next Story
    ×