search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பல இடங்களில் காவலாளிகள் இல்லாத வங்கிகள்
    X

    சென்னையில் பல இடங்களில் காவலாளிகள் இல்லாத வங்கிகள்

    சென்னையில் பல இடங்களில் காவலாளிகள் இல்லாத வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் அபாய ஒலி கருவிகளும் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

    சென்னை:

    விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாக்கரை உடைத்து துணிகர கொள்ளை நடந்து இருப்பது வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வங்கி கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியே இந்த துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பதன்மூலம் வங்கிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் அச்சம் தெரிவித்தனர்.. வங்கிகளில் கொள்ளை சம்பவம் நடக்கும்போது சில நாட்கள் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களிலேயே அதுபற்றிய பேச்சே இல்லாமல் போய் விடுகிறது.

    நேற்று போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு ஏஜென்சிகளின் பிரதிநிதிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது வங்கிகள் செலவினங்களை குறைப்பதற்காக போதிய காவலாளிகளை நியமிக்ககாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்கள். இதுதொடர்பாக நேற்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

    மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான வங்கிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலாளிகளுக்கு ரூ.10 ஆயிரமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் காவலாளிகளுக்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் தரவேண்டும் என்று மத்திய அரசின் வழிமுறைகள் கூறுகிறது.

    அதன்படி சம்பளம் தருவதில்லை என்றும், அங்கீகாரம் இல்லாத பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து ரூ.7 அயிரத்துக்கு குறைந்த சம்பளத்தில் காவலாளிகளை நியமிக்கிறார்கள். அவ்வாறு நியமிக்கப்படும் காவலாளிகள் வயதானவர்களாகவும், போதிய பயிற்சி இல்லாதவர்களாகவும் இருப்பதாக பாதுகாப்பு ஏஜென்சி பிரதிநிதிகள் குற்றம்சாட்டினார்கள்.

    மேலும் பாதுகாப்பு ஏஜென்சிகள் காவலாளிகளின் வருகை பதிவேடுகளை சரியாக பராமரிப்பது இல்லை. சில வங்கிகள் செலவினங்களை குறைப்பதற்காக காவலாளிகளை தனிப்பட்ட முறையில் நியமிக்காமல் காம்ப்ளக்ஸ் கட்டிடங்களின் காவலாளிகள் பொறுப்பிலேயே விட்டுவிடுவதாக புகார் கூறப்படுகிறது.

    இதனால் பல வங்கிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. ஏ.டி.எம். மையங்களுக்கும் போதிய காவலாளிகள் நியமிக்கப்படவில்லை. பல லட்சம் பணம் வைக்கப்பட்டு இருக்கும் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட தொகை செலவிட வேண்டியது வங்கிகளின் அவசியம் ஆகும்.

    வங்கிகள் ஏ.டி.எம்.களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் அபாய ஒலி கருவிகளும் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவற்றின் செயல்பாடுகள் பற்றி வங்கிகளும், பாதுகாப்பு ஏஜென்சிகளும் அவ்வபோது கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.#tamilnews

    Next Story
    ×