search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவிகள் பெயரில் காண்டிராக்ட்- மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் மீது வழக்கு
    X

    மனைவிகள் பெயரில் காண்டிராக்ட்- மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் மீது வழக்கு

    மனைவி பெயரில் கம்பெனி தொடங்கி காண்டிராக்ட் எடுத்து வந்த மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் குமார். இவரும், கிண்டியில் உள்ள அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றும் உமா சங்கரும் சேர்ந்து மின்வாரிய டெண்டரில் முறைகேடு செய்வதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இவர்கள் இருவரும் தங்களது மனைவி பெயரில் கம்பெனி தொடங்கி காண்டிராக்ட் எடுத்து பணிகளை பெற்று வருவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். அதிகாரிகள் உமாசங்கர், குமார் இருவரும் தங்கள் மனைவி பெயரில் 2014-ம் ஆண்டு குரோம்பேட்டையில் டிரினிட்டி காண்டிராக்ட் சர்வீசஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்துள்ளனர்.

    மின்வாரிய பணிகளுக்கு டெண்டர் எடுக்கும் தகுதியான காண்டிராக்டர் பட்டியலில் இந்த கம்பெனியை கொண்டு வர விண்ணப்பிக்கின்றனர். 2 ஆண்டுகள் காத்திருந்து 2016-ம் ஆண்டு ரூ.75 லட்சத்துக்கு மேல் டெண்டர் எடுக்கும் காண்டிராக்டர் பட்டியலில் இந்த கம்பெனியை கொண்டு வர தங்கள் பதவியை பயன்படுத்தி அனுமதி வாங்குகிறார்கள்.

    இதன்மூலம் துணை மின் நிலையங்களுக்கு மின் கம்பிகள் மற்றும் மின்சாதனங்களை வினியோகிக்கும் ஒப்பந்தங்களில் பங்கேற்று மனைவி பங்குதாரராக உள்ள கம்பெனிக்கு டெண்டர் எடுக்க உதவி செய்துள்ளனர்.

    2016-ம் ஆண்டு சோழிங்கநல்லூரில் 110 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களை அமைக்க ரூ.1 கோடியே 11 லட்சத்துக்கான டெண்டரை பெற்றுள்ளனர்.

    இதேபோல் 2017-ம் ஆண்டு ரூ.1 கோடியே 29 லட்சத்துக்கான டெண்டரை மனைவி பெயரிலான கம்பெனிக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.

    மின்வாரிய காண்டிராக்ட் விதியை மீறி அவர்கள் செயல்பட்டு வந்துள்ளதால் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உமாசங்கர், குமார், அவர்களது மனைவிகள் செல்வபிரியா, சுமிதா ஆகிய 4 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கிண்டி கணேஷ் நகரில் அருகருகே உள்ள இவர்களது வீட்டில் சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில மாதங்களாக லஞ்சம் வாங்கும் துணை வேந்தர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி, முன்னாள் துணை வேந்தர்கள் ராஜாராம், வணங்காமுடி ஆகியோர் சிக்கி உள்ளனர்.

    இந்த பட்டியலில் இப்போது மின்வாரிய அதிகாரிகளையும் சேர்த்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×