search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனத்துறையினர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் - அதுல்ய மிஸ்ரா
    X

    வனத்துறையினர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் - அதுல்ய மிஸ்ரா

    குரங்கணி தீ விபத்தில் வனத்துறையினர் உள்பட எந்த அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று அதுல்யமிஸ்ரா தெரிவித்தார்.
    தேனி:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11-ந் தேதி 36 பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்ததில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த தீ விபத்து குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 21-ந் தேதி முதல் விசாரணை நடத்தி வரும் அவர் தீ விபத்து நடந்த பகுதி முழுவதையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இதனையடுத்து போடி நகராட்சி அலுவலகத்தில் குரங்கணி தீ விபத்து விசாரணைக்கான அலுவலகம் திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள் மற்றும் தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள், உதவியவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அங்கு ஏராளமானோர் வந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி அதுல்யமிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    3-ம் கட்ட விசாரணையில் 73 பேரிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து போட்டோக்கள், வீடியோ, டிரக்கிங் சென்ற ஆதாரங்கள், உயிருக்கு போராடியவர்களின் உரையாடல்கள் போன்றவை பெறப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்கும் மேலாக வனப்பகுதியில் தீ விபத்து நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறேன். அது போன்று தீ விபத்து நடந்த சமயத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது பொதுமக்கள் 16 பேர், வனத்துறையினர் 21, போலீசார் 17, வருவாய்த்துறையினர் 4, தீயணைப்பு துறையினர் 9, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2 பேர், சமூக நல ஆர்வலர்கள் 4 பேர் என 73 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அதனை வீடியோ பதிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும். வாக்குமூலம் அளித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயம்பட்டவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews

    Next Story
    ×