search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமராஜ ரத யாத்திரையில் பங்கேற்ற 100 பேர் மீது வழக்கு
    X

    ராமராஜ ரத யாத்திரையில் பங்கேற்ற 100 பேர் மீது வழக்கு

    குமரி மாவட்டத்தில் ராமராஜ ரத யாத்திரையில் அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்று, போக்குவரத்துக்கு இடையூறு செய்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் ஆதரவு அமைப்பு சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    பல்வேறு மாநிலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை கடந்த 20-ந் தேதி நெல்லை மாவட்டம் வந்தது. பின்னர் விருதுநகர், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி சென்று விட்டு நேற்றுமுன்தினம் குமரி மாவட்டம் வந்தது.

    ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக நேற்று மதியம் ரத யாத்திரை கேரளா சென்றது.

    குமரி மாவட்டத்தில் ரத யாத்திரைக்கு விசுவ இந்து பரி‌ஷத், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கிய சந்திப்புகளில் ஊர்வலத்துக்கு பூரண கும்ப மரியாதை அளித்து மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ரத யாத்திரையை தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாகச் சென்றனர்.

    இவ்வாறு அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்று, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறி குமரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் செட்டிக்குளத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரை பொதுக்கூட்டம் நடத்த இந்து அமைப்பினர் அனுமதி கேட்டு இருந்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் ரத யாத்திரை செட்டிக்குளத்தை அடைந்ததும் தடையை மீறி அங்கு ஏராளமானோரை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பா.ஜனதா நாகர்கோவில் நகர தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 188 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தக்கலையில் ராமராஜ்ய ரத யாத்திரை வந்தபோது எந்தவொரு அனுமதியும் பெறாமல் மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக வந்து போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பேரில் விசுவ இந்து பரி‌ஷத் மாவட்ட செயலாளர் வேலு பிள்ளை என்ற அஜி (வயது 40) உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #tamilnews
    Next Story
    ×