search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் - மணிமுத்தாறு அணை தண்ணீரை பயன்படுத்த திட்டம்
    X

    நெல்லை, தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் - மணிமுத்தாறு அணை தண்ணீரை பயன்படுத்த திட்டம்

    நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீருக்கு மணி முத்தாறு அணை தண்ணீரை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் முதல் மணிமுத்தாறு அணை மூடப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி மற்றும் அதன் கிளை நதிகளில் கட்டப்பட்டுள்ள இந்த அணைகள் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.

    வழக்கமாக பாபநாசம் அணை தண்ணீர் மே மாதம் இறுதி வரை குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்காக பயன் படுத்தப்படும் வகையில் நீர் இருப்பு வைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சேர்வலாறு அணையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சேர்வலாறு அணை தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு விட்டது.

    பாபநாசம் அணையிலும் தண்ணீர் வெகுவாக குறைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாபநாசம் அணை நீர்மட்டம் 25 அடியாக குறைந்தது. அப்போது திடீரென மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பாபநாசம் அணையில் நீர்மட்டம் 50 அடியாகவும், சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 60 அடியாகவும் உயர்ந்தது. ஆனால் அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 3 நாட்களில் அனைத்து தண்ணீரையும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விட்டு மீண்டும் சேர்வலாறு அணையை காலி செய்தனர்.

    பாபநாசம் அணையிலும் நீர்மட்டத்தை குறைத்தால் தான், சேர்வலாறில் நீர்மட்டம் உயராது என்பதால் பாபநாசம் அணையிலும் வேக வேகமாக நீர்மட்டத்தை குறைத்து வருகிறார்கள். இதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினரும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து பாபநாசம் அணையில் தண்ணீரை சேமிக்க வலியுறுத்தினர்.

    ஆனால் பாபநாசம் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று பாபநாசம் அணை நீர்மட்டம் 33.30 அடியாக உள்ளது. அணைக்கு 177.08 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 304.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன்படி தண்ணீர் வெளியேற்றப்பட்டால் இன்னும் 15 நாட்களில் பாபநாசம் அணையும் காலியாகி விடும்.

    அதன்பிறகு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீருக்கு மணி முத்தாறு அணை தண்ணீரை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் முதல் மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. மணிமுத்தாறு அணையில் இருந்து கடந்த 20-ந்தேதி வரை வினாடிக்கு 125 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    தற்போது விவசாய பணிகள் ஓரளவு முடிந்து விட்டதாலும், நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருப்பதாலும் மணிமுத்தாறு அணை மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. அநேகமாக பாபநாசம் அணை நீர்மட்டம் காலியானதும் மணிமுத்தாறு அணை தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×