search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து நடந்த இடத்தில் விசாரணை அதிகாரி அதுல்யமிஸ்ரா ஆய்வு நடத்திய காட்சி.
    X
    தீ விபத்து நடந்த இடத்தில் விசாரணை அதிகாரி அதுல்யமிஸ்ரா ஆய்வு நடத்திய காட்சி.

    குரங்கணி தீ விபத்து குறித்து மலை கிராமத்தினர் கருத்து தெரிவிக்கலாம் - விசாரணை அதிகாரி

    குரங்கணி தீ விபத்து குறித்து இன்று முதல் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று விசாரணை அதிகாரி அதுல்யமிஸ்ரா தெரிவித்துள்ளார்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ந் தேதி சென்னை, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து 36 பேர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

    படுகாயமடைந்த 27 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அடுத்தடுத்து 10 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை முதன்மைச் செயலர் அதுல்யமிஸ்ரா தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பு அதிகாரிகளுடன் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

    நேற்று காலை குரங்கணியில் தீ விபத்து நடந்த ஒத்தை மரம் மலைப்பகுதிக்கு சென்றார். பின்னர் மலையேற்ற பயிற்சியில் வந்தவர்கள் உணவு சாப்பிட்ட இடம், தீ விபத்து நடந்த இடம், அவர்கள் தப்பி ஓடிய இடங்கள், ஹெலிகாப்டரில் மீட்பு பணிகள் நடந்த இடங்களை ஆய்வு செய்தார்.

    குரங்கணியில் இருந்து ஒத்தை மரம் வழியாக கொழுக்கு மலைக்கு 8 கி.மீ தூரம் நடந்தே வந்தார். அங்கிருந்து ஜீப் மூலம் சூரிய நல்லிக்கும், பின்னர் அங்கிருந்து கார் மூலம் டாப் ஸ்டே‌ஷனுக்கும் சென்றார். பின்னர் டாப் ஸ்டே‌ஷனில் இருந்து குரங்கணிக்கு 12 கி.மீ தூரம் அவர் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். 20 கி.மீ தூரம் கரடு முரடான வனப்பகுதியில் விசாரணை அதிகாரி அதுல்யமிஸ்ரா நடத்திய இந்த ஆய்வு வனத்துறையினர் மற்றும் போலீசாரை வியக்க வைத்தது.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    9 பேர் தீயில் கருகி பலியான பகுதி மற்றும் கொழுக்கு மலையில் அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியை பார்வையிட்டேன். தீ விபத்து குறித்து சிறப்பு விசாரணை அலுவலகம் இன்று போடி நகராட்சி அலுவலகத்தில் திறக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தில் தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள், உதவி செய்தவர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆகிய அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும் தங்களிடம் உள்ள வீடியோ, ஆடியோ பதிவுகளையும் அளிக்கலாம்.

    இதனைத் தொடர்ந்து தீ விபத்தில் இறந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விசாரணை நடத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×