search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா. ஜனதாவை முறியடிக்க வேண்டும்- நல்லக்கண்ணு பேச்சு
    X

    மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா. ஜனதாவை முறியடிக்க வேண்டும்- நல்லக்கண்ணு பேச்சு

    மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதீய ஜனதாவை முறியடிக்க வேண்டும் என்று கடலூரில் நடந்த கூட்டத்தில் நல்லக்கண்ணு பேசினார்.

    கடலூர்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் 24-வது மாநில மாநாட்டு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடைபெற்றது. இதற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கம்யூனிஸ்டு கட்சிகளையும், திராவிட இயக்கங்களையும் ஒழிக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதை முறியடித்து மதசார்பற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாடுபட்டு வருகிறோம். மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும். காவிரி தண்ணீர் மறுக்கப்படுகிறது. அதை பாதுகாத்து மீட்டெடுக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. கட்சிக்கு எதிராக செயல்படும் சக்திகளை முறியடிக்க நாம் வலுப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தமிழக மக்களின் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும், மூடநம்பிக்கைகளை அகற்றுவதற்காகவும் பாடுபட்ட பெரியாரின் சிலை உடைக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலைக்கு பூட்டுப்போடப்படுகிறது. பூட்டுபோடப்படாத சிலையே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உள்ளது.

    ராமராஜ்ய ரத யாத்திரையை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே ராமருக்கு கோவில் அமைப்போம், அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறி சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அமைதியை குலைக்க வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-


    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி வருகிற 30-ந் தேதிக்குள் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகளும், நலன்களும் பறிக்கப்படுவதை தமிழக அரசு கைகட்டி வேடிக்கைப்பார்க்கிறது. மத்திய, மாநில அரசுகளை அகற்றும் யுத்தத்துக்கு நாம் ஆயத்தமாக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் குளோப், காசிலிங்கம், பொருளாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.

    Next Story
    ×