search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடம் அருகே செல்போன் டவரில் ஏறி வியாபாரி தற்கொலை மிரட்டல்
    X

    பெண்ணாடம் அருகே செல்போன் டவரில் ஏறி வியாபாரி தற்கொலை மிரட்டல்

    தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மீனவர் தெருவை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 30). இவர் சைக்கிளில் சென்று டீ விற்கும் தொழில் செய்து வருகிறார். அப்பாஸ் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்கி நின்றது. இது தொடர்பாக அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தமிழரசன் மற்றும் அவரது உறவினர்கள் அப்பாசை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை விருத்தாசலம்- திட்டக்குடி சாலையோரம் தேரடி தெருவில் உள்ள மளிகை கடையில் அப்பாஸ் டீ கப்புகள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் அப்பாசை மீண்டும் தாக்கினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பாஸ் கையில் மண்எண்ணை கேனுடன் அதே பகுதியில் 200 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறினார்.

    பின்னர் அவர் கையில் வைத்திருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றினார். பின்னர் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மிரட்டினார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பாசிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர் தன்னை தாக்கிய தமிழரசன், அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    முதலில் நீங்கள் கீழே இறங்கி வாருங்கள். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதனை ஏற்காத அப்பாஸ் கீழே இறங்கி வர மறுத்தார்.

    இதைத்தொடர்ந்து அப்பாசின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களும் அப்பாசிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    1 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு அப்பாஸ் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

    உடனே அப்பாசை பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிய அப்பாஸ் அந்த பகுதியில் நின்ற பஸ்சின் கீழே படுத்துக் கொண்டார்.

    பின்னர் அப்பாசை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் விருத்தாசலம்- திட்டக்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×