search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன் கைது- கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல்
    X

    திருமாவளவன் கைது- கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல்

    திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    விசுவ இந்து பரி‌ஷத் ஆதரவு அமைப்பு சார்பாக அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி ராமராஜ்ய ரதயாத்திரை பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கேரளா வந்தது. பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை வழியாக தமிழகத்திற்கு இன்று வந்தது.

    இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதனை கண்டித்தும், ரதயாத்திரை தமிழகத்துக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.



    கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள கடலூர்-புதுவை சாலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று காலை திரண்டனர். அவர்கள் திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த மறியலுக்கு கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பழனிவேல், செந்தில், ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த கடலூர் போலீசார் அங்கு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 50 பேரை கைது செய்தனர். அவர்களை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதேப்போல் நெல்லிகுப்பத்தில் திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடந்தது. கடலூர்- நெல்லிகுப்பம் சாலையில் ம.தி.மு.க. மாவட்ட செலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் முஜிக்கூர் ரகுமான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் ராஜரகிமுல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சினர் கலந்து கொண்டனர். சாலை மறியல் செய்த 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வடலூர் நான்கு முனை ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் செய்தனர். வடலூர் செயலாளர்கள் கண்ணன்,ஜோதிமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மறியல் செய்தவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

    விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் முன்பு இன்று மதியம் 12 மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மத்திய-மாநில அரசை கண்டித்தும், திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×