search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறக்கும் படையினரை சிறைபிடித்த பிளஸ்-2 மாணவர்கள்
    X

    பறக்கும் படையினரை சிறைபிடித்த பிளஸ்-2 மாணவர்கள்

    தேனி அருகே தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பறக்கும்படையினரை பிளஸ்-2 மாணவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தேனி:

    தேனி அருகே முத்துதேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று இயற்பியல், பொருளியல் ஆகிய பாடங்களில் 538 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

    தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்வு கண்காணிப்புகுழு தலைவரும், மதுரை பள்ளி கல்வித்துணை இயக்குனருமான ஆசிர்வாதம் தலைமையில் 3 பறக்கும்படையினர் வந்தனர். இவர்கள் இயற்பியல் பாடத்தேர்வு நடந்த தேர்வறைக்கு சென்று அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களிடம் கெடுபிடி காட்டினர்.

    இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தேர்வு முடிந்த பின்னர் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனம் மற்றும் பறக்கும்படை குழுவினரை சிறைபிடித்து தர்ணா போராட்டம் செய்தனர்.

    இதனால் பறக்கும்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வந்தால்தான் இவர்களை விடுவிப்போம் என கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி விரைந்து வந்தார். அவர்களிடம் மாணவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் மாணவ-மாணவிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு 7 மணிவரை நீடித்தது. அதன் பின்னர் மாணவர்களை கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்து விடைத்தாள் வாகனத்தை மீட்டனர்.

    பறக்கும்படையினரும் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து மாணவ- மாணவிகள் ஆவேசத்துடன் கூறியதாவது:-



    இயற்பியல் தேர்வு நடந்த தேர்வறைக்கு பறக்கும் படையினர் வந்தனர். அவர்கள் ஒவ்வொரு பக்கத்திலும் தேர்வு பதிவு எண்ணை எழுதவேண்டும். வினாக்களை வரிசைப்படிதான் எழுதவேண்டும். அதோடு சட்டை காலர் மடிப்பை சோதனை போட்டனர். நாங்கள் முதலில் தெரிந்த அதிக மதிப்பெண் கொண்ட வினாக்களைதான் எழுத திட்டமிட்டிருந்தோம். ஆனால் பறக்கும்படையினர் அவ்வாறு தேர்வு எழுத எங்களை அனுமதிக்கவில்லை. பறக்கும்படையினரின் கெடுபிடியால் தேர்வு நேரம் வீணாகியது. இதனால் எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. வினாத்தாள் எளிதாக இருந்தும் நாங்கள் தேர்வு எழுதும் மனநிலையில் இல்லை.

    எனவே எங்களுக்கு மறுதேர்வு நடத்தவேண்டும் அல்லது போனஸ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில்,

    மாணவர்களின் குற்றச்சாட்டு குறித்து தேர்வறை கண்காணிப்பு அலுவலர் மற்றும் பறக்கும்படையினரிடம் உரிய விசாரணை நடத்தப்படும். விசாரணை அறிக்கை கல்வித்துறை தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பப்படும். அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றனர். #tamilnews
    Next Story
    ×