search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் அதிபரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
    X

    தொழில் அதிபரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

    பொய் வழக்கில் விடுவிக்க ரூ. 10 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டையைச் சேர்ந்தவர் கோபால். தொழில் அதிபரான இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    அதில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் என் மீது பொய்யான திருட்டு வழக்கை பதிந்து கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுவதாக மிரட்டினார்.

    இந்த வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் என்னிடம் கேட்டார். பணம் தரவில்லை என்றால் என்கவுண்டரில் சுட்டு கொன்று விடுவதாக துப்பாக்கியை எனது நெற்றியில் வைத்து மிரட்டினார். 5 நாட்கள் போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து பேரம் பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், பாதிக்கப்பட்ட கோபாலுக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அத்தொகையை இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம் இருந்து வசூலித்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    மேலும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார்.
    Next Story
    ×