search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் வந்தது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை - புளியரையில் போராட்ட அறிவிப்பால் போலீசார் குவிப்பு
    X

    தமிழகம் வந்தது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை - புளியரையில் போராட்ட அறிவிப்பால் போலீசார் குவிப்பு

    ராமராஜ்ஜிய ரதயாத்திரைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் கேரள மாநிலம் புனலூரில் இருந்து தமிழக எல்லையான புளியரைக்கு வந்தது. #VHPRadhaYatra #RadhaYatra
    செங்கோட்டை:

    விசுவ இந்து பரி‌ஷத் ஆதரவு அமைப்பு சார்பாக அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி ராமராஜ்ஜிய ரதயாத்திரை பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் வருகிறது. இந்த ரதம் தனது பயணத்தை கடந்தமாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி அயோத்தியில் தொடங்கியது.

    இந்த ரத யாத்திரை மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்று விட்டு கேரளா வந்தது. பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை வழியாக தமிழகத்திற்கு இன்று வருகிறது.

    இந்த ராமராஜ்ஜிய ரத வருகைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர பேசுவதற்கு அனுமதி மறுத்ததால் எம்.எல்.ஏ.க்கள் முகமது அபுபக்கர், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சட்டசபையில் நேற்று வெளி நடப்பு செய்தனர்.

    ராமராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழகத்திற்குள் வர விடாமல் புளியரையில் மறிக்கப்போவதாக சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அறிவித்தன. இதனால் செங்கோட்டை, புளியரை மட்டுமின்றி நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    உரிய அனுமதி பெற்று இந்த யாத்திரை நடத்தப்படுவதால் யாத்திரைக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் விதமாக நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வருகிற 23-ந்தேதி மாலை வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து ரத யாத்திரை தமிழகத்திற்கு வரக்கூடிய நுழைவு பகுதி மற்றும் செல்லக்கூடிய வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவெடுக்கப்பட்டது. செங்கோட்டை மற்றும் புளியரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



    பல்வேறு இடங்களில் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாவட்டங்களை சேர்ந்த யாரும் நெல்லை மாவட்டத்திற்குள் வரக் கூடாது, ஒரு சிலருக்கு மேல் கூட்டமாக கூடக்கூடாது, அவ்வாறு கூடினால் கைது செய்யப்படுவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புளியரை பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்கேயே முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகிறார்.

    இதற்கிடையே ராமராஜ்ஜிய ரதயாத்திரை இன்று காலை கேரள மாநிலம் புனலூரில் இருந்து தமிழக எல்லையான புளியரைக்கு வந்தது. அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இந்த ரத யாத்திரைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். யாத்திரைக்கு முன்னும் பின்னும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு செல்கிறார்கள்.

    மேலும் ரதயாத்திரை செல்லும் வழியிலும் யாத்திரை நின்று செல்லக் கூடிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க வஜ்ரா வாகனங்கள் யாத்திரையுடன் செல்கின்றன.

    தொடர்ந்து ராமராஜ்ஜிய ரதம் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதிகளுக்கு செல்கிறது. இதையடுத்து ரதயாத்திரை விருதுநகர் மாவட்டத்திற்கு செல்கிறது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மதுரை, காரைக்குடி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கும், 22-ந்தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி, நெல்லை பகுதிகளுக்கும், 23-ந்தேதி நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கும் செல்கிறது.

    பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு 24-ந்தேதி செல்வதோடு ரத யாத்திரை நிறைவடைகிறது. #VHPRadhaYatra #RadhaYatra #tamilnews

    Next Story
    ×