search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி பெயரை வைத்துக் கொண்டு காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது- தமிழிசை
    X

    காந்தி பெயரை வைத்துக் கொண்டு காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது- தமிழிசை

    பெயருக்கு பின்னால் காந்தி பெயரை வைத்துக் கொண்டு மக்களை காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். #tamilisai #rahulgandhi

    சேலம்:

    சேலத்தில் இன்று பா.ஜ.க.மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தி, அழகு தமிழ் மொழியை பேசும் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது இந்த அழகு தமிழைப்பற்றி எங்கே உங்களுக்கு அறிவு போனது.

    இதே அழகு தமிழ் பேசிய அத்தனை மக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். உங்கள் ஆட்சி தான் இருந்தது. உங்கள் துணையோடு தான் அது நடந்தது.

    அதுமட்டும் அல்ல. அங்கு கொன்று குவிக்கிறது மட்டுமில்ல. ஆரம்ப கால சரித்திரத்தில் பார்த்தீர்களானால் இங்கே இந்தியை எதிர்த்து போராடிய மொழிப்போர் தியாகிகளை சுட்டுக்கொன்றது யார்?. காங்கிரஸ் ஆட்சிதான் அப்போது இருந்தது.

    மொழி பேசுபவர்களை கொன்று குவித்து விட்டு இன்று எங்களை பார்த்து மொழியை புறக்கணிக்கிறது என்று சொல்வது எந்த அளவிற்கு சரியாக இருக்கும்.

    இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த காலத்திலும் உங்கள் பிரதமர் மன்மோகன்சிங் போகவில்லை, நீங்களும் போகவில்லை. ஆனால் பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக இலங்கைக்கு சென்றவர் பிரதமர் மோடி. தமிழ் பெண்களின் வீட்டுக்கு சென்று பால்காய்ச்சியவர் மோடி.

    ராகுல்காந்தி நீங்கள் இப்போது தமிழை வைத்து பிழைப்பு நடத்த ஆரம்பித்து இருக்கிறீர்கள். தமிழை வைத்து இப்படி பேசினால் உடனே தமிழர்கள் எல்லாம் மன்னிச்சுருவாங்க, மறந்துருவாங்க என்றில்லை. இது தமிழர்களின் மனதில் ஆறாத வடு.

    இலங்கை தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக துணை நின்றது காங்கிரஸ். இன்று நீங்கள் தமிழ் மொழியை பற்றி பேசுகிறீர்கள்.

    தமிழர்களை பிழைக்க வைக்க முடியாத ராகுல் தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதற்கு பேசுகிறார் என்ற நேரடி குற்றச்சாட்டை நான் இங்கே வைக்கிறேன்.

    பா.ஜ.க.வின் குரல் ஒரு அமைப்பின் குரல் என்கிறார் ராகுல் காந்தி. 22 மாநிலங்களை ஆண்டு கொண்டு மத்தியில் ஆட்சியையும் வைத்துக் கொண்டு 60 சதவீத மக்களின் ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் குரல் தான் நாட்டின் குரல்.

    எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாமல் 4 மாநிலத்தை கூட ஆள முடியாமல் சுருங்கி இருக்கின்ற காங்கிரசின் குரல் நாட்டின் குரலா? உங்களது குரல் ஒரு குடும்பத்தின் குரல். இதில் குஷ்பு வேற...

    பெரியவர்களை உதா சீனப்படுத்துகிறீர்கள் என்று எங்களை சொல்கிறீங்க. எவ்வளவு பெரிய தலைவர்களை எல்லாம் வைத்து கொண்டு ராகுல் தான் தகுதியானவர் என முன் நிறுத்தி இருக்கிறீர்கள். இது உங்கள் கட்சி பிரச்சினை. இதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை.

    ஏதோ என்று நீங்கள் ஒரு கூட்டத்தை கூட்டி வந்து உங்கள் கட்சி கூட்டத்தில் மிக மோசமாக பேசுகிறீர்கள்.

    தேசபக்தியின் குரல் பா.ஜ.க.வின் குரல், தேச பக்தர்களின் குரல் பா.ஜ.க. வின் குரல்.

    ஆகவே ஒரு குடும்பத்தின் குரலை வைத்து கொண்டு எல்லாம் மாநிலங்களிலும் சுருங்கிய ஒரு கட்சி இன்று நாட்டின் குரல் என்று நீங்கள் சொன்னால் எல்லோரும் ஒத்துக்கொள்வார்களா?

    பா.ஜ.க. தோல்வி அடைந்ததை பற்றி சொல்கிறீர்கள். அத்தனை இடத்திலும் நீங்கள் (ராகுல்) டெபாசீட் இழந்து கொண்டிருக்கிறீர்கள்.

    நீரவ் மோடி மோசடி செய்ததால் மோடி என்று பெயர் வருவதால் பாரத பிரதமர் மோடியுடன் தொடர்புபடுத்தி ராகுல் காந்தி பேசுகிறார். இவ்வளவு மோசமான அரசியலை ராகுல் செய்கிறார்.


    பெயருக்கு பின்னால் காந்தி பெயரை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள். சோனியா ராஜூவ் என ஏன்? பெயரை வைக்க வில்லை. மகாத்மா காந்தி பெயரை வைத்துக் கொண்டு காந்தி குடும்பத்தினர் என ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்.

    சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்க வில்லை. கோவை சசிகுமார் கொலையில் நேற்று என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியது. இதற்கு சிலர் என்.ஐ.ஏ. ஏன்? விசாரணை நடத்த வேண்டும் என ஏளனமாக கூறுகின்றனர். நடுரோட்டில் வெட்டி சாய்க்கப்பட்ட கொலை. இதில் என்.ஐ.ஏ. விசாரணை நடத்துவதில் என்ன? தவறு இருக்கிறது.

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இல்லை என நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக கல்லூரி முன்பு மாணவி கொலை, கர்ப்பிணி பெண் கொலை என்ற பட்டியல் தொடர்கிறது.

    சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது குறித்து உறுதியான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. இதுபோல் ஆவடி ராணுவ தொழிற்சாலை, கோவையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான அச்சகத்தையும் தனியார் மயமாக்குவதாக தகவலை பரப்புகிறார்கள். இதை மத்திய அரசு மறுத்துள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

    நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச மன்மோகன் சிங்குக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் பிரதமராக இருந்தபோது தான் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்துக்கு சென்றது.

    நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதில் வெற்றி பெற்று பாரதீய ஜனதா தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும். வெளியிலும், உள்ளேயும் நிறைய ஆதரவு இருக்கிறது. பா.ஜ.க.ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகமாக உள்ளது குறிப்பாக ஒரே டிக்கெட்டை போக்குவரத்து கழகத்தில் 4 முறை அச்சடித்து பயணிகளுக்கு வழங்கி டிரைவர்களும், கண்டக்டர்களும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #tamilisai #rahulgandhi

    Next Story
    ×