search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடராஜன் உடல்நிலை தேறுகிறது- மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த வைரமுத்து தகவல்
    X

    நடராஜன் உடல்நிலை தேறுகிறது- மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த வைரமுத்து தகவல்

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாக, மருத்துவமனையில் அவரை பார்த்த கவிஞர் வைரமுத்து கூறினார்.
    சென்னை:

    சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் செயல் இழந்தது.

    இதனை தொடர்ந்து அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடமிருந்து கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டு நடராஜனுக்கு பொருத்தப்பட்டது.

    உடல்நிலை குணமான நிலையில் நடராஜன் கடந்த நவம்பர் 2-ந்தேதி வீடு திரும்பினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நடராஜனுக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அவர் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடராஜன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இன்று 4-வது நாளாக நடராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.


    இருப்பினும் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே உள்ளார்.

    நடராஜனின் உடல்நிலை குறித்து குளோபல் ஆஸ்பத்திரி இன்று அளித்த அறிக்கையில், நடராஜன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இருதயத்தில் நோய் ஏற்பட்டுள்ளது. அதனால் சுவாச குழாய் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் குளோபல் ஆஸ்பத்திரிக்கு சென்று நடராஜனை பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    நடராஜனின் உடல்நிலை நேற்று இருந்ததை விட தேறி உள்ளது. அவரை பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வருகிறார். எங்கள் வக்கீல் ஏற்கனவே பெங்களூர் சென்று விட்டார். நானும் அங்கு செல்ல உள்ளேன்.

    இவ்வாறு தினகரன் கூறினார்.

    ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ள நடராஜனை கவிஞர் வைரமுத்து இன்று பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழால் எனக்கு உறவானவர் அண்ணன் நடராஜன். அவரை மருத்துவமனையில் சந்தித்த்து நலம் விசாரித்து வந்தேன். படுக்கையில் இருந்த படி என்னைப் பார்த்தார். நான் வந்திருப்பதை உணர்ந்து அவர் கண் திறந்து பார்த்தார். அமைதியாக சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். வலது கையை 100 செ.மீ. உயர்த்தினார்.

    பின்னர் தன்னை தொடச் சொல்லி சைகை காட்டினார். புன்னகைத்தார். விரைவில் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நலம் பெறுவார் என்று வாழ்த்துகிறேன். அவருக்கு உயர்ந்த முறையில் நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்றை விட இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் துணையுடன் மூச்சு கருவிகள் உதவியுடன் அவர் உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்ற பாதையில் வந்து கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×