search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே தாய்-மகள் மீது தாக்குதல்- மேலும் 3 வாலிபர்களிடம் விசாரணை
    X

    திருக்கோவிலூர் அருகே தாய்-மகள் மீது தாக்குதல்- மேலும் 3 வாலிபர்களிடம் விசாரணை

    திருக்கோவிலூர் அருகே தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மேலும் 3 வாலிபர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வெள்ளம்புத்தூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ஆராயி (வயது 46). இவர் தனது மகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோருடன் வெள்ளம் புத்தூரில் வசித்துவந்தார்.

    கடந்த மாதம் 21-ந் தேதி இரவு அவர்கள் வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் சிலர் ஆராயி வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த ஆராயி, தனம், சமயன் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

    தலையில் பலத்த காயம் அடைந்த சமயன் சம்பவ இடத்தில் இறந்து விட்டான். மயங்கி கிடந்த ஆராயி, தனம் ஆகியோர் மீட்கப்பட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை உடனே கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

    அதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு குற்றவாளிகளை தேடினர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வெளி மாநில வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். அதன் அடிப்படையில் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் ரெயில்வே சுரங்க பாதை பணியில் ஈடுபட்டுவந்த 4 பேரைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஒரு தனிப்படை போலீசார் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ஆராயின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
     
    அப்போது அந்த கிராமத்துக்கு நாமக்கல்லை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. மேலும் சம்பவம் நடைபெற்ற மறுநாள் அந்த வாலிபர் அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி சென்றதும் தெரிய வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நாமக்கல் சென்று அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர். மேலும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரையும் போலீசார் பிடித்து ரகசியமாக விசாரித்தனர்.

    இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட ஆராயி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரியும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெண்கள் ஒருவார காலமாக வெள்ளம்புத்தூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை 10 நாளில் பிடிப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அதிகாரிகள் கூறிய கெடு முடிவடைந்த பின்னரும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை.

    விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடைபெற்று 26 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் பற்றி எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தியும் எந்த ஒரு சிறு தடயம் கூட போலீசுக்கு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மேலும் 3 வாலிபர்களை போலீசார் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்தனர். திருக்கோவிலூரில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திட உணவை தனம் கையால் எடுத்து சாப்பிடுகிறாள். மேலும் அவள் பேச முயற்சிக்கிறாள். எனவே அவளிடம் போலீசார் வாக்குமூலம் பெற முயன்று வருகிறார்கள். அவள் கூறும் தகவல்களின் படி குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும்என போலீசார் கருதுகிறார்கள். விரைவில் சிறுமி தனத்திடம் போலீசார் வாக்கு மூலம் பெறுவார்கள் என தெரிகிறது. #Tamilnews
    Next Story
    ×