search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து
    X

    சேலத்தில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து

    சேலத்தில் இன்று கார் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    சேலம்:

    கோவை ராம்நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 45). இவர் சேலம் சாரதா கல்லூரி அருகே காண்வென்ட் ரோட்டில் 2 தளங்கள் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் தனம் ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் என்ஜீன் ஆயில்கள், கார் உதிரி பாகங்கள் ஆகியவை வாங்கி வைக்கப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கீழ் தளத்தில் ராணுவ கேண்டீன் செயல்பட்டு வருகிறது. சிறப்பு அங்காடியான இங்கு மளிகை பொருட்கள் உள்பட வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ராணுவ வீரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    நேற்று இரவு 7 மணிக்கு வழக்கம்போல் ஆட்டோ ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை 7.30 மணிக்கு திடீரென மேல் தளத்தில் இருந்து குபு குபுவென கரும்புகை வெளியே வந்தது. இந்த புகை கட்டிடம் முழுவதும் சூழ்ந்து கொண்டது. இதனால் கட்டிடம் இருப்பதே வெளியே தெரியவில்லை.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்று முதலில் முன்பக்க கதவை நவீன கருவிகள் மூலம் உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது நிறுவனத்திற்குள் டயர், ஆயில்கள் போன்றவை மளமளவென கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருகில் சென்று தீயை அணைக்க முடியவில்லை

    இதனால் தீயணைப்பு வீரர்கள் சிலர் படபடவென ஜன்னல்களை உடைத்தும், கட்டிடத்தின் சுவரில் துளையிட்டும் உள்ளே சென்றனர். பின்னர் தண்ணீர் வாகனத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்று கடைக்குள் பீய்ச்சி அடித்தனர். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. டயர் மற்றும் ஆயில் என்பதால் தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது.

    இதனால் சூரமங்கலம், ஓமலூர் உள்ளிட்ட தீயணைப்பு வண்டிகளும் வரவழைக்கப்பட்டு கட்டிடத்தின் முன்பக்கம், பின் பக்கம் என 4 பக்கங்களும் 30-க்கும் மேற்பட்ட தீய ணைப்பு வீரர்கள் நின்று கொண்டு கட்டிடம் முழுவதும் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகின்றனர்.

    தீ அணையாததால் தொடர்ந்து தீயணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் போலீசாரின் வஜ்ரா வாகனங்களும், தனியார் தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.


    தீ பிடித்த ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்தின் அருகில் கடைகள் எதுவும் இல்லை. சுமார் 200 அடி தொலைவில் தான் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளிக்கு இன்று விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. மேலும் அந்த பகுதியில் வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் நிறைய உள்ளன.

    சுமார் 200 அடி தொலையில் இடைவெளி விட்டு இவைகள் இருப்பதால் அங்கு தீ பரவ வாய்ப்பில்லை. இருந்தாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    தீயின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு கீறல்கள் விழுந்துள்ளன. தீயில் எரிந்த பொருட்களில் சேதமதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக 150 போலீசார் ராணுவ கேண்டீனில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் போலீஸ் துணை கமி‌ஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை தலைமையிலான ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் தீ பற்றி எரியும் கட்டிடத்தின் முன்பு கூடி விடாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×