search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை கிறிஸ்தவ ஆலயங்களில் புகுந்து தாக்குதல்: ஆதாரம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்
    X

    மதுரை கிறிஸ்தவ ஆலயங்களில் புகுந்து தாக்குதல்: ஆதாரம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்

    மதுரையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்த தாக்குதல் குறித்து வீடியோ ஆதாரங்கள் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று கிறிஸ்தவ போதகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை ஆனையூர், கூடல்நகர், சிக்கந்தர்சாவடி ஆகிய இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் கடந்த 11-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கும்பலாக சென்று தாக்குதல் நடத்தினர்.

    அங்கிருந்த போதகர்களை அவதூறாக பேசி தாக்கியதுடன் ஆலயங்களில் இருந்த பைபிள் மற்றும் வசன போர்டுகளை தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கிறிஸ்தவ போதகர்கள் கூடல்புதூர், அலங்காநல்லூர் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.

    புகாரில், தாக்குதல் தொடர்புடைய முக்கிய நபர்கள் விவரம் மற்றும் வீடியோ ஆதாரங்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இது கிறிஸ்தவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகியும் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருவதாகவும் கிறிஸ்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வைகோ, மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பேராயர்கள் ஜோசப், அந்தோணி பாப்பு சாமி ஆகியோர் கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டனர். வைகோ நேரில் சென்று பார்வையிட்டார்.

    தாக்குதல் சம்பவம் குறித்து கிறிஸ்தவ போதகர்கள் கூறியதாவது:-

    தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் போலீசார் நடத்தும் விசாரணை எங்களுக்கு திருப்திகரமாக இல்லை.

    கிறிஸ்தவர்கள் என்றைக்கும் வன்முறைக்கு இடம் அளிக்காதவர்கள். போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கைது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

    எனவே போலீசார் யாருடைய நிர்ப்பந்தத்துக்கும் அடிபணியாமல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews

    Next Story
    ×