search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெயில் நிறுவனம் நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் - நாகை விவசாயிகள் தொடர் போராட்ட அறிவிப்பு
    X

    கெயில் நிறுவனம் நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் - நாகை விவசாயிகள் தொடர் போராட்ட அறிவிப்பு

    விவசாய நிலம் வழியாக தரங்கம்பாடிக்கு எண்ணெய் குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டு கிராம நிர்வாக அலுவலகங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு மத்தியில் கடந்த 2013-ம் ஆண்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) சார்பில் மாதானம் திட்டம் என்ற பெயரில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எண்ணெய் துரப்பன பணி மேற்கொண்டு வருகிறது.

    தற்போது இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கூடுதலாக 7 கிணறுகளை உருவாக்கியுள்ள அந்த நிறுவனம் நாள்தோறும் சுமார் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் எண்ணெய் எடுக்கிறது. இதற்கான ரசாயன கலவைகளை பூமிக்குள் செலுத்துவதால் நிலத்தடிநீர் அப்பகுதி சுற்று வட்டாரங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விளைநிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பழைய பாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் அமைக்க திட்டமிட்டு அதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான சட்டம் 1962-ன்கீழ் (சட்டம்50-62) பிரிவு 3-ன்கீழ் பிரசுரிக்கப்பட்ட இந்திய அரசிதழில் விளம்பர பலகையில் விளம்பரப்படுத்துதல் தொடர்பான விவரங்களை கெயில் நிறுவன அதிகாரம் பெற்ற அலுவலர் கையொப்பம் இட்ட நோட்டீஸ் பொதுமக்கள் பார்வையில் படும்படி மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இது பழையபாளையம், அகர வட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி கிராம விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து நஞ்சை, புன்செய் விவசாய மாவட்ட சங்க தலைவர் வில்வநாதன் கூறுகையில், பழையபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் வேட்டங்குடி கிராமத்தில் இருவக் கொல்லை என்ற இடத்தில் எண்ணெய் கிணறுகள் அமைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் குடிநீர், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பழைய பாளையத்திலிருந்து விவசாய நிலம் வழியாக தரங்கம்பாடிக்கு எண்ணெய் குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.


     கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கெயில் நிறுவனம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்.

    அதுமட்டுமல்லாமல் குழாய் அமைக்க விவசாயிகளிடம் கையெழுத்து கேட்டு அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

    எனவே விளை நிலங்களை எண்ணெய் நிறுவனம் கையகப்படுத்த நினைத்தால் பொதுமக்கள், விவசாயிகள் ஒன்று திரண்டு தொடர் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews



    Next Story
    ×