search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு புறப்பட தயாராகும் விசைப்படகு.
    X
    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு புறப்பட தயாராகும் விசைப்படகு.

    லட்சத்தீவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் அடையாள அட்டைகள் பறிமுதல் - கலெக்டரிடம் மீனவ அமைப்புகள் புகார்

    குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்று லட்சத்தீவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டதால் கலெக்டரிடம் மீனவ அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி கடல் பகுதியில் கடந்த 11-ந்தேதி புயல் சின்னம் உருவானது.

    இதன் காரணமாக தென் தமிழக கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றும் பலத்த மழையும் பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடந்த 10-ந்தேதி முதலே கடலுக்கு செல்லவில்லை.

    10-ந்தேதிக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கும்படி மீன்வளத்துறை மற்றும் மீனவ அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.

    இதையடுத்து குமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் கோவா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநில துறைமுகங்களில் தஞ்சமடைந்தனர்.

    லட்சத்தீவில் உள்ள கவரட்டி, கல்படி, கம்மத், கில்பத் தீவுகளிலும் ஏராளமான குமரி மீனவர்கள் கரை ஒதுங்கினர்.

    இவ்வாறு தஞ்சமடைந்த குமரி மீனவர்களின் அடையாள அட்டை, படகு களுக்கான சான்றிதழ் ஆகியவற்றை லட்சத்தீவில் உள்ள துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி கரை ஒதுங்கியதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இப்போது புயல் ஆபத்து நீங்கி விட்டதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து லட்சத்தீவில் கரையேறிய மீனவர்கள் மீண்டும் அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதிகாரிகள் அவர்களின் அடையாள அட்டைகளை திருப்பி வழங்க மறுத்து விட்டனர்.

    இத்தகவலை மீனவர்கள் குமரி மாவட்ட மீனவ அமைப்புகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு இத்தகவலை கொண்டு சென்றனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்கள் புயல் ஆபத்து நீங்கியதையடுத்து மீண்டும் கடலுக்கு புறப்பட்டனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஒருசில படகுகள் இன்று மீன்பிடிக்க புறப்பட்டன. இன்னும் ஒருசில நாட்களுக்கு பிறகு முழு அளவில் படகுகள் கடலுக்கு புறப்படும் என தெரிகிறது.  #tamilnews




    Next Story
    ×