search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை காலத்தில் பால் தட்டுப்பாடு அபாயம் - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்
    X

    கோடை காலத்தில் பால் தட்டுப்பாடு அபாயம் - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்

    கோடை காலத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செங்கோட்டு வேலு தெரிவித்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அம்மம் பாளையம் பகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. சேலம் மாவட்டத்தில் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரம் லிட்டர் பால் அம்மம்பாளையம் பால் குளிரூட்டும் நிலையத்தில் குளிரூட்டப்பட்டு இங்கு இருந்து டேங்கர் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தாத காரணத்தால் விவசாயிகள் ஆவின் நிர்வாகத்தை விட்டு அதிக விலை கொடுக்கும் தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர்.

    இதனால் கோடை காலத்தில் ஆவினுக்கு பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது:-

    விவசாயிகளிடம் இருந்து ஆவின் நிர்வாகம் பாலை கொள்முதல் செய்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் கொள்முதல் விலையை உயர்த்தினார். அதற்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை.

    தற்போது மாட்டுத் தீவனத்தின் விலை உயர்ந்து விட்டது. ஆனால் பாலுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி தர வேண்டும். விலையை உயர்த்தவில்லையென்றால் ஆவினுக்கு பால் கொடுக்கும் முடிவை விவசாயிகள் கைவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் கோடை காலத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படும்.
     
    ஏற்கனவே ஆவின் நிர்வாகம் 33 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வந்தது. தற்போது அந்த கொள்முதல் 4 லட்சம் லிட்டர் குறைந்து 29 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இது மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    மேலும் அதிக விலை கொடுக்கும் தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலை கொடுக்கும் நிலை விவசாயிகளுக்கு உருவாகி விடும். இப்படி ஒரு சூழ்நிலை உருவானால் ஆவினுக்கு பால் தட்டுப்பாடு உருவாகும். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தான் பால் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது.

    தற்போது தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகளுக்கு பலன் இல்லை. பால் அதிகமாக உற்பத்தியாகும் சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்தால் நன்றாக இருக்கும். தற்போது வறட்சி நிலவி வருவதால் மாடுகளுக்கு புல் உள்ளிட்ட தீவனங்கள் கிடைக்கவில்லை.

    இதனால் தீவனங்களை அதிக விலை கொடுத்து வாங்கி மாட்டுக்கு போட்டு விட்டு பாலை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை விவசாயிகள் விரும்ப மாட்டார்கள்.

    எனவே அதிக விலை கொடுக்கும் தனியார் நிறுவனங்களை தேடிப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகி விடும். இதை அரசு கவனத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்திதர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×