search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் கனமழை - பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
    X

    நெல்லையில் கனமழை - பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு

    நெல்லையில் பெய்த திடீர் மழையால் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மாவட்ட நிர்வாகம் மூழ்கிய பயிருக்கு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
    நெல்லை:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் அம்பை, பாபநாசம், கடையம், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் அம்பை, மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, ஆலடியூர், வெள்ளங்குழி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சியால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்ததையடுத்து பிசான சாகுபடிக்கு நெல் பயிரிட்டிருந்தோம். இந்நிலையில் திடீர் மழையால் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.

    இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவிட்டு பயிர் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த மழையால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நீரில் மூழ்கிய பயிருக்கு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதேபோல் கீழப்பாவூர், மேலப்பாவூர் பகுதிகளில் உள்ள வயல்களில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 70 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் பெரும்பாலான விவசாய நிலங்கள் பயிரிடப்படாமல் இருந்தது.

    இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்த போதிலும் கீழப்பாவூர் பகுதியில் குறைந்த அளவே மழை பெய்தது. இதனால் மேலப்பாவூர், கீழப்பாவூர் குளங்கள் முழுவதுமாக நிரம்பாமல் இருந்தது. எனினும் பயிரிடப்பட்டிருந்த வயல்களிலும் நேற்று பெய்த திடீர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மேலும் பாதிப்படைந்துள்ளனர்.

    நெல்லை, பாளை, தருவை, கோபாலசமுத்திரம் பகுதிகளிலும் திடீர் மழையால் அங்கு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. நெல்லை சந்திப்பு, கட்டுடையார் குடியிருப்பு, கொக்கிரகுளம் பகுதிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது.

    பேட்டை கருங்காடு பகுதியில் விவசாயிகள் ஏராளமான வாழைகள் பயிரிடப்பட்டிருந்தனர். அந்த வாழைகள் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாய்ந்து சேதமடைந்துள்ளது.  #tamilnews
    Next Story
    ×