search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டரால் பெண் உயிரிழப்பு - மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீசு
    X

    இன்ஸ்பெக்டரால் பெண் உயிரிழப்பு - மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீசு

    கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து அறிக்கை தயார் செய்து அனுப்பும்படி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    சென்னை:

    திருச்சி திருவெறும்பூரில் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் சென்ற ராஜாவையும், அவரது மனைவி உஷாவையும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் விரட்டி சென்று 3 தடவை எட்டி உதைத்தார்.

    ஹெல்மட் அணியாமல் வந்த ராஜா நிற்காமல் சென்றதால் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆத்திரத்தில் எட்டி உதைத்துள்ளார்.



    இதில் நிலை தடுமாறிய ராஜாவும், உஷாவும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். 3 மாத கர்ப்பிணியாக இருந்த உஷாவுக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதை கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போராட்டம் நடத்தியவர்களில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே ராஜா அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை போலீசார் இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்தனர். திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ‌ஷகீலா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் நேற்று காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இன்ஸ்பெக்டர் உதைத்ததால் உஷா உயிரிழந்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.7 லட்சமும், கமல்ஹாசன் ரூ.10 லட்சமும் உதவி வழங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் உஷா உயிரிழந்த சம்பவம் குறித்து வெளியான தகவல்கள் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளது. போலீசாரின் கொடூர செயல்களுக்கு இது ஒரு மோசமான உதாரணமாக அமைந்து விட்டதாக தேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து அறிக்கை தயார் செய்து அனுப்பும்படி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரத்துக்குள் இந்த அறிக்கையை தர வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே மாநில மனித உரிமை ஆணையமும் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம், மாநில போலீஸ் டி.ஜி.பிக்கும், ஆணைய விசாரணை குழுவுக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளது.

    8 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×