search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு
    X

    திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு

    திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    திருச்சி:

    நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முதலில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

    தற்போது நிர்வாகிகள் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு மாநில நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று நேர்காணல் நடத்தி பதவிகளை அறிவிக்க உள்ளனர். அதன்படி தஞ்சையில் நேற்று நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்றது.

    இன்று திருச்சி மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்றது. திருச்சி தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கிய நேர்காணல் கூட்டத்தில், மாநில மன்ற நிர்வாகிகள் சுதாகர், ராஜூ மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினர்.

    அப்போது மன்றத்தில் வகித்த பொறுப்பு, அரசியல் அனுபவம், மாவட்ட, தொகுதி, வார்டு வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விபரம், வெற்றி வாய்ப்பு, உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டனர். முன்னதாக ஒவ்வொருவருக்கும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.

    அதில் பெயர் உள்ளிட்ட சுய விவரங்கள் மற்றும் எத்தனை ஆண்டுகளாக மன்றத்தில் உள்ளனர், என்ன பதவிக்கு போட்டியிட விரும்புகிறீர்கள் என்பது உள்ளிட்ட விவரங் கள் அடங்கிய படிவங்கள் வழங்கப்பட்டன. உறுப்பினர்கள் அதை நிறைவு செய்து கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.

    திருச்சி மாவட்டம் மாநகர், புறநகர், நகரம், ஒன்றியம், பேரூராட்சி, கோட்டம் என பிரிக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    அவர்களிடம் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து வீடியோகான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி பேசுகிறார். மாநில மன்ற நிர்வாகிகளும் பல்வேறு அறிவுரைகளை வழங்குகின்றனர்.

    திருச்சி மாவட்டத்தில் ரஜினி கட்சியில் பதவிகளை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான பதவிகளுக்கு ரஜினி மன்றத்தில் நீண்ட காலமாக மாவட்ட பதவிகளில் உள்ள கர்ணன், சுதர்சன், மன்னன் இளங்கோ, கலீல், பகவான் விஜி, சபையர் முத்து உள்ளிட்டவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியம், ஒரு நகராட்சி, ஒரு பேரூராட்சி, ஒரு மாநகர் மாவட்டம், ஒரு புறநகர் மாவட்டத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். அரசியல் அனுபவம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தவர்கள், அதற்கான ஆவணங்களை வழங்கியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    நாளை 8-ந்தேதி பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடக்கிறது. #tamilnews
    Next Story
    ×