search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

    தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலும் பெரியார் சிலைகள் அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். #Periyarstatue
    சென்னை:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜனதா கட்சியினர் சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போல தமிழகத்திலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று டுவிட்டரில் பதிவிட்ட பிறகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலும் பெரியார் சிலைகள் அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



    வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலை, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலை உள்ளிட்டவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை, கச்சேரி வீதியில் உள்ள அண்ணா மற்றும் பெரியார் நினைவகம், கோபி பெரியார் திடல் முன்புறம் உள்ள பெரியார் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர், செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்பட 31 இடங்களில் பெரியார் சிலை உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் உள்பட 16 இடங்களில் பெரியார் சிலை உள்ளன. இந்த சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம். வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெரியார் சிலையை தி.மு.க.வினர் இரவு-பகலாக பாதுகாத்து வருகின்றனர்.

    இதனால் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியை முடக்கி விட்டுள்ளனர்.

    சென்னை தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பா.ஜனதா அலுவலகத்திற்கு முன்பு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தக் கூடும் என்பதை கருத்தில் கொண்டு அங்கும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. #Periyarstatue #tamilnews

    Next Story
    ×