search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி அருகே வெடிகுண்டு இருப்பதாக நடுவழியில் ரெயில் நிறுத்தம் - பயணிகள் ஓட்டம்
    X

    வாணியம்பாடி அருகே வெடிகுண்டு இருப்பதாக நடுவழியில் ரெயில் நிறுத்தம் - பயணிகள் ஓட்டம்

    வாணியம்பாடி அருகே வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் நடுவழியில் ரெயிலை நிறுத்தி பயணிகள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.

    வாணியம்பாடி:

    அசாம் மாநிலம் திப்ருகரிலிருந்து கன்னியாகுமரிக்கு ‘விவேக் எக்ஸ்பிரஸ்’ அதிவேக வாராந்திர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த ரெயில் நேற்று வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் நின்ற பின் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாணியம்பாடி ரெயில் நிலையத்தை கடந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றபோது ரெயிலின் 4-வது பெட்டியில் இருந்த சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். அப்போது ரெயிலில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், சில நிமிடங்களில் வெடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பதற்றத்துடன் ரெயிலில் இருந்து ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கீழே இறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்தனர்.

    அதே நேரத்தில் அந்த ரெயிலின் 8-வது பெட்டியில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்தது. இது மேலும் ரெயில் பயணிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் இருந்த பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் ஆங்காங்கே நின்றும், சிலர் தலைதெறிக்க ஓடிக்கொண்டும் இருந்தனர்.

    அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ‘டபுள் டெக்கர்’ ரெயில் எதிர் திசையில் அந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தது. பயணிகள் தண்டவாளத்தின் நடுவில் நிற்பதை பார்த்த அந்த ரெயிலின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு சற்று தொலைவில் பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதற்கிடையே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயில் நிறுத்தப்பட்ட தகவல் அறிந்ததும் வாணியம்பாடி ரெயில் நிலைய அதிகாரிகளும், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கூட்ட நெரிசலில் 4-வது பெட்டியில் இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். அப்போது வெடிகுண்டு இருப்பதாக கூறி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த 4 பேரையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இந்த களேபரத்தால் ‘விவேக் எக்ஸ்பிரஸ்’ ரெயில் அங்கேயே அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னால் வந்த சென்னை - பெங்களூரு, கோவை செல்லும் ‘இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரெயில் ஆகியவையும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் ரெயில்வே அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் ‘விவேக் எக்ஸ்பிரஸ்’ ரெயில் புறபபட்டு சென்றது.அதனை தொடர்ந்து மற்ற ரெயில்களும் புறப்பட்டு சென்றன. #tamilnews

    Next Story
    ×