search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழிப்பறியில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் - என்ஜினீயர் லாவண்யா பேட்டி
    X

    வழிப்பறியில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் - என்ஜினீயர் லாவண்யா பேட்டி

    வழிப்பறியில் இருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மீண்ட என்ஜினீயர் லாவண்யா கூறினார்.
    சோழிங்கநல்லூர்:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயரான லாவண்யா சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    தாழம்பூரில் தங்கி இருந்த லாவண்யா கடந்த 13-ந் தேதி நள்ளிரவு வேலை முடிந்து மொபட்டில் ஒட்டியம்பாக்கம் அரசன் கழனி-காரணை சாலையில் சென்ற போது 3 கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் அவரது தலையில் பலமாக அடித்தனர்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லாவண்யா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரிடம் இருந்த நகைகள், செல்போன், மொபட், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.

    சாலையோரத்தில் கிடந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சுயநினைவு திரும்பியது. குணமடைந்த அவர் வீடு திரும்பினார்.

    லாவண்யாவை தாக்கி நகை பறித்த கொள்ளையர்களான செம்மஞ்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி, நாராயண மூர்த்தி, லோகேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி மாலைமலர் நிருபரிடம் லாவண்யா கூறியதாவது:-

    சம்பவம் நடந்த இரவு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். இரவு நேரம் என்பதால் அதிகளவில் வாகனங்கள் செல்லவில்லை. சாலை காலியாக இருந்தது.

    அப்போது 3 பேர் மொபட்டை வழிமறித்து என் கையில் அணிந்திருந்த தங்க பிரேஸ்லேட்டை பிடுங்க முயற்சித்தனர். உடனே நான் என்னை எதுவும் செய்யாதீர்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை நானே தருகிறேன் என்று கூறினேன். ஆனாலும் அவர்கள் என்னை தாக்க முயன்றனர். இதனால் நான் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பின்னால் இருந்து ஒருவர் இரும்பு கம்பியால் தலையில் அடித்தார். நிலைதடுமாறி சாலையில் கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்தேன்.

    என்னிடமிருந்த செல்போன், தங்க நகை மற்றும் மொபட்டை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அங்கு நான் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் மிதந்தாலும் நான் மனதைரியத்துடன் மீண்டு எழுந்து எதிரே புதியதாக கட்டிவரும் வரும் கட்டிடத்திற்கு ரத்தம் வழிய வழிய நடந்து சென்று சிறிது நேரம் அங்கு தூங்கினேன். அதன் பின் மக்கள் இருக்கும் பகுதிக்கு சென்றால் உதவி கிடைக்கும் என்று நினைத்தேன்.

    முகம் மற்றும் கைகளில் கத்தியால் வெட்டியும் எனக்கு சிறிதும் வலியானது தெரியவில்லை. ஏனென்றால் என் அப்பா ஏற்கனவே ஒரு மகளை இழந்துவிட்டார். மீண்டும் என்னை அவர் இழக்ககூடாது என ஒரே வெறியுடன் நான் இருந்ததால் எனக்கு வலியானது தெரியவில்லை.

    சுமார் 2 மணிநேரம் கழித்து அந்த சாலையில் வந்த ஒரு வாகன ஓட்டியை பார்த்தேன். அவர் மூலம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். போலீசார் என்னை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    என்னை தாக்கியவர்களை எந்த ஆதாரமும் இல்லாமல் போலீசார் துரிதமாக கண்டுபிடித்தது பாராட்டத்தக்கது. என்னை தாக்கிய மூவரின் பெற்றோர்கள் வளர்ப்பு சரியில்லை. 3 குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் என்னிடத்தில் காட்டி இவர்கள்தான் வழிபறியில் ஈடுபட்டவர்களா என்று உறுதி செய்தனர்.

    ஆனால் நான் அவர்களின் முகத்தை பார்க்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர்களை நான் வாழ்வில் மறுபடியும் பார்க்கக்கூடாது என்றும் அவர்களுடயை முகம் எனக்கு நினைவில் வந்து காயப்படுத்திக் கொண்டிருக்கும் என்பதால் நான் பார்க்கவில்லை என்று கூறினேன்.

    வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து தண்டனை வழங்கும் போலீசார் அவர்களின் புகைப்படத்தை பொது மக்களுக்கு தெரியும் அளவிற்கு விளம்பரம் செய்ய வேண்டும். எனக்கு இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் உள்ளது. அதை நான் குணமடைந்த பின்பு அரசு எனக்கு உதவினால் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

    கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். ஐ.டி. அமைச்சர் மருத்துவ மனைக்கு வந்து என்னுடைய ரிப்போட்களை பார்த்தார். அதேபோல் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தினந்தோறும் எனது நலன் மீது அக்கறை எடுத்துக் கொண்டார். எனக்கு மறு பிறவியை காவல்துறை கொடுத்தது.

    அதேபோல் மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என அனைவரும் என்னை அக்கறையாக பார்த்துக் கொண்டனர். தமிழக மக்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டதுதான் என்னை பிழைக்க வைத்தது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து என்னிடம் நலன் விசாரித்தது மகிழ்ச்சி அளித்தது. எனது பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 4-வது பிள்ளையாக பள்ளிக்கரணை  ஆய்வாளர் சிவக்குமாரை எங்கள் குடும்பம் பார்க்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×