search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் காட்பாடி ரெயில்வே மேம்பால பணிகள் மார்ச் 30-ந் தேதிக்குள் முடிவடையும்
    X

    விழுப்புரம் காட்பாடி ரெயில்வே மேம்பால பணிகள் மார்ச் 30-ந் தேதிக்குள் முடிவடையும்

    விழுப்புரம் காட்பாடி ரெயில்வே மேம்பால பணிகள் மார்ச் 30-ந் தேதிக்குள் முடிவடையும் என நெடுஞ்சாலைதுறை தலைமைபொறியாளர் கூறியுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் சென்னை சாலையில் காட்பாடி ரெயில்வே கேட் அமைந்திருந்தது. அந்த கேட் வழியாக விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர்.

    ரெயில் வரும் நேரத்தில் கேட் மூடப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று கடந்த 2014-ம் ஆண்டு காட்பாடி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இதையொட்டி கடந்த 4 ஆண்டுகளாக காட்பாடி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனால் அந்த வழியாக சென்று வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டம்,நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கலெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடனே பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.

    இந்த நிலையில் காட்பாடி ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் செல்வன் சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு இன்று வந்தார். அவர் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் மேம்பால பணிகள் எப்படி நடைபெறுகிறது என கேட்டறிந்தார்.பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,

    காட்பாடி ரெயில்வே மேம்பால பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பணிகள் விரைவில் முடிவடையும். அடுத்த மாதம் மார்ச் 30-ந் தேதிக்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிந்துவிடும். பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மேம்பாலம் திறந்து விடப்படும் என்றார்.

    பேட்டியின் போது விழுப்புரம் நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் பழனிச்சாமி, மேற்பார்வையாளர் கவுரி உட்பட பலர் உடன் இருந்தனர். #tamilnews
    Next Story
    ×