search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சனை - புதுவையிலும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ.
    X

    காவிரி பிரச்சனை - புதுவையிலும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக புதுவையிலும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்குவது சம்பந்தமான மேல்முறையீட்டு மனுவில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு 14.74 டி.எம்.சி. குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க தனது தீர்ப்பில் கூறி இருந்தது.

    மேலும் 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    காவிரி மேலாண்மை அமைத்தால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த முடியும் என்ற சூழ்நிலையில், தமிழக அரசானது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன்படி தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வந்தால் தான் புதுவைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி காவிரி கடைமடை பகுதியான காரைக்கால் பகுதிக்கு தண்ணீர் பெற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

    தமிழகத்தில் அனைத்து கட்சி தலைர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்திக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முடிவு எடுத்துள்ள நிலையில் புதுவை முதல்-அமைச்சர் வெற்று அறிக்கை விடுத்து கொண்டு இருக்கிறார்.

    இதற்கு மேலும் புதுவை அரசு அலட்சியமாக இருக்காமல் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்ட வேண்டும்.

    புதுவையை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    காவிரி தண்ணீரை பெற தமிழகம் எடுக்கும் அத்தனை நடவடிக்கையையும் புதுவை அரசும் எடுத்து, தமிழகத்தோடு இப்பிரச்சினையில் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #tamilnews
    Next Story
    ×