search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் படகில் ஏறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர்.
    X
    கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் படகில் ஏறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

    அந்தோணியார் ஆலய திருவிழா: கச்சத்தீவிற்கு 2 ஆயிரம் பக்தர்கள் புறப்பட்டனர்

    அந்தோணியார் ஆலய திருவிழா இன்று நடைபெறுவதையொட்டி கச்சத்தீவு செல்ல 62 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டனர்.
    ராமேசுவரம்:

    இந்திய-இலங்கை கடல் எல்லையில் உள்ள கச்சத்தீவில் பழமைமிக்க அந்தோணியார் ஆலயம் உள்ளது. யாழ்பாண மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வது மரபாக உள்ளது.

    இந்த ஆண்டுக்கான விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து திருப்பலி, தேர்பவனி நடைபெறும்.

    நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் நாள் திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது. இந்த ஆண்டு தமிழக பக்தர்கள் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 40 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடி மரமும், 4 அடி உயரம் கொண்ட அந்தோணியார் சொரூபமும், சிலுவையும் வழங்கப்பட்டுள்ளது.

    விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ராமேசுவரம் மீனவர்கள் உள்பட ஏராளமானோர் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தனர். இதை அதிகாரிகள் ஆய்வு செய்து இறுதியாக கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க 2,103 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    அந்தோணியார் திருவிழா இன்று நடைபெறுவதையொட்டி கச்சத்தீவு செல்ல பதிவு செய்திருந்த ராமேசுவரம் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே ராமேசுவரம் துறைமுகத்துக்கு வந்தனர்.



    அவர்கள் அங்கே போடப்பட்டிருந்த பந்தலில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் கலெக்டர் நடராஜன் தலைமையில் வருவாய், காவல்துறை அதிகாரிகள், சுங்க இலாகாவினர் பயணிகளை சோதனை செய்தனர். உணவு பண்டங்கள், சிறிதளவு பணம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்பட்டு படகில் ஏற்றப்பட்டனர். காலை 7 மணி முதல் படகுகள் கச்சத்தீவுக்கு புறப்பட்டன. 62 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கச்சத்தீவு புறப்பட்டனர். படகுகளை பின்தொடர்ந்து பாதுகாப்புக்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பல்கள், பைபர் படகுகள் பின் தொடர்ந்து சென்றன.

    திருவிழாவையொட்டி ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×