search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்ச வழக்கில் கைதான கணபதி ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி
    X

    லஞ்ச வழக்கில் கைதான கணபதி ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி

    லஞ்ச வழக்கில் கைதாகி இடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கணபதியின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கோவை:

    கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் கணபதி கடந்த 3-ந்தேதி லஞ்ச வழக்கில் கைதானார். அவருடன் பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் பணி நியமனத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    இருவரும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 8-ந்தேதி விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.

    இதையடுத்து கடந்த 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் கணபதி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து துணை வேந்தர் கணபதிக்கு ஜாமீன் கேட்டு 2-வது முறையாக, சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதேபோல் பேராசிரியர் தர்மராஜூக்கும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு இன்று நீதிபதி ஜான்மினோ முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் சார்பில் வக்கீல் ஞானபாரதி ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது,

    கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காசோலைகள் கைப்பற்றப்படவில்லை. அவரது வீட்டில் 16 மணிநேரம் நடந்த சோதனையின்போது காசோலைகள் கைப்பற்றப்படவில்லை. அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தபோதும் காசோலைகள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.

    எனவே அவர் மேற்கொண்டு சிறையில் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை. இதேபோல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் தர்மராஜ் மீதும் நேரடியாக பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு இல்லை. அவரும் மேலும் சிறையில் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை. இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல் சிவக்குமார் வாதாடும்போது கூறியதாவது, கணபதி மீது வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய போது எந்த ஆவணமும் கொடுக்க வில்லை. கைது செய்த பின்னர் தான் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் உண்மையை மறைக்கக் கூடியவர். அவரை ஜாமீனில் விட்டால் உண்மையை மறைத்துவிடுவார். அவரது பாஸ்போர்ட் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஜாமீனில் விட்டால் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடுவார். எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது என்றார்.

    இதற்கு பதில் அளித்து கணபதி சார்பில் ஆஜரான வக்கீல் ஞானபாரதி வாதாடும்போது, கோர்ட்டு உத்தரவிட்டால் கணபதியின் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். கோர்ட்டு விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்பட தயாராக இருக்கிறோம். எனவே துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜான்மினோ இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கணபதியின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×