search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலை நிறுத்தி தண்ணீர் கேட்டு பயணிகள் போராட்டம்
    X

    ரெயிலை நிறுத்தி தண்ணீர் கேட்டு பயணிகள் போராட்டம்

    ஈரோடு ரெயில் நிலையத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி பயணிகள் தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

    இதில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், பயணிகள் ரெயில்களும் உண்டு. பெரும்பாலும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாமல் போய் விடுகிறது.

    இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும்போது பயணிகள் கீழே இறங்கி தண்ணீர் கேட்டு ரெயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நேற்று மாலை ஈரோடு ரெயில் நிலையம் வந்தது.

    ரெயிலில் தண்ணீர் இல்லாததால் அதில் பயணம் செய்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் நிற்கும்போது தண்ணீர் நிரப்புவார்கள் என பயணிகள் உறுதியாக நம்பி இருந்தனர்.

    ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நடக்காமல் போய் விட்டது. தண்ணீர் நிரப்பாமல் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதனால் ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களில் ஈரோடு ரெயில் நிலையத்திலேயே நின்றுவிட்டது. ரெயில் நின்றதும் அனைத்து பெட்டிகளில் இருந்தும் பயணிகள் கீழே இறங்கினர்.

    ‘‘வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும்’’, ‘‘நிரப்பு நிரப்பு ரெயிலில் உடனே எங்களுக்கு தண்ணீரை நிரப்பு’’ என்று கோ‌ஷமிட்டனர். பயணிகளின் தண்ணீர் போராட்டத்தால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயணிகள், ‘‘குடிக்க கூட தண்ணீர் காசு கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் கழிவறையில் தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும்? என ஆவேசமாக கூறினர்.

    ‘‘தவிர்க்க முடியாத சூழ் நிலையால் தண்ணீர் நிரப்ப முடியவில்லை. சேலத்தில் ரெயில் நிற்கும்போது கண்டிப்பாக தண்ணீர் நிரப்பப்படும். அதுவரை பொறுமையாக இருங்கள். போராட்டத்தை கைவிட்டு ரெயிலில் ஏறுங்கள்’’ என்று கூறினர்.

    அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை பயணிகள் ஏற்றுக்கொண்டு மீண்டும் ரெயிலில் ஏறினர். இதைத் தொடர்ந்து மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. #Tamilnews
    Next Story
    ×