search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணை இல்லத்தில் இறந்தவர்கள் எலும்புகள் விற்பனையா? - பொதுமக்கள் மறியல்
    X

    கருணை இல்லத்தில் இறந்தவர்கள் எலும்புகள் விற்பனையா? - பொதுமக்கள் மறியல்

    பாலேஸ்வரம் பகுதி மக்கள் ஏராளமானோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கருணை இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த திருமுக்கூடல் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்ற முதியோர்களை பராமரிக்கும் கிறிஸ்தவ கருணை இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற முதியோர்கள் ஏராளமானோருக்கு அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

    நேற்று மாலை ஆசிரமத்துக்கு சொந்தமான வேன் ஒன்று உத்திரமேரூர் அருகே உள்ள எடையார்பாக்கம் காட்டு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேனில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

    சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வேனை மடக்கிப்பிடித்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுடன் துணியால் சுற்றப்பட்ட ஆண் பிணம் இருந்தது. அருகில் திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ், திருவள்ளூரை சேர்ந்த அன்னம்மாள் ஆகியோர் பயணம் செய்து வந்ததும் தெரிந்தது.

    பிணத்துடன் பயணம் செய்த அவர்கள் பயத்தில் அலறியதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சாலைவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் வேனை ஓட்டி வந்தது ராஜேஷ் என்பது தெரிந்தது. இந்த கருணை இல்லத்துக்கு சொந்தமான மற்றொரு கிளை இரும்புலியூரில் உள்ளது. அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயகுமார் (வயது 70) என்பவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார்கள்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்த விஜயகுமாரின் உடலை பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு காய்கறி ஏற்றிச் சென்ற வேனில் ஏற்றி வந்துள்ளார்.

    அப்போது இரும்புலியூரில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜையும், அன்னம்மாளையும் பிணத்துடன் வேனில் அழைத்து வந்து இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அறிந்ததும் பாலேஸ்வரம் பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கருணை இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு மறியலிலும் ஈடுபட்டனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், தாசில்தார் அகிலா தேவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வாத்தை நடத்தினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் போது முதியோர்களை ஏற்றி வந்த வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கருணை இல்லத்தின் மீது பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தின் பின்புறத்தில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தும் மிகப்பெரிய கட்டிடம் உள்ளது.

    உடல்களை நீண்ட நாட்கள் அங்கு வைத்து உருக வைக்கிறார்கள். பின்னர் எலும்புகளை தனியாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதரவற்ற முதியோர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பொது மக்களின் இந்த குற்றச்சாட்டு போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக கருணை இல்லத்தில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    விசாரணைக்கு பின்னர் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×