search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் மர்மமாக இறந்த 5 பேரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் - நீதி விசாரணை கோரி மறியல்
    X

    ஆந்திராவில் மர்மமாக இறந்த 5 பேரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் - நீதி விசாரணை கோரி மறியல்

    ஆந்திராவில் மர்மமாக இறந்த 5 பேரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. நீதி விசாரணை கோரி தேசிய மலைவாழ் மக்கள் கட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமந்துறை, கரியகோவில் மற்றும் கல்வராயன் மலை பகுதி உள்ளது.

    இந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மைசூரில் மிளகு பறிக்கும் வேலை என்று கூறி புரோக்கர்களால் அழைத்து சென்றனர்.

    இதில் கரியகோவில் அருகே உள்ள கீழ்நாடு ஊராட்சிக்குபட்ட கிராங்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சின்னபையன் (42), முருகேசன் (42), ஜெயராஜ் (25) மற்றும் அடியானூரை சேர்ந்த மற்றொரு முருகேசன், கீழ் ஆவாரை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் ஆகியோர் ஆந்திர மாநிலம் கடப்பா ஓண்டிமிட்டா ஏரியில் கடந்த 18-ந் தேதி பிணமாக மிதந்தனர்.

    செம்மரம் வெட்ட சென்றபோது ஆந்திர போலீசார் துரத்தியதால் ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அந்த ஏரியில் இடுப்பளவு மட்டுமே தண்ணீர் உள்ளதால் ஏரியில் விழுந்து சாக வாய்ப்பில்லை என்றும் 5 தொழிலாளர்களையும் கொன்று ஏரியில் வீசியுள்ளதாக புகார் கூறப்பட்டது.

    மேலும் செம்மரக் கடத்தலுக்கு துணை போக மறுத்ததால் புரோக்கர்களுடன் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் சிலர் புகார் கூறினர். இதனால் அவர்களது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

    செம்மரம் வெட்ட வந்தவர்கள் ஏரியில் விழுந்து இறந்ததாகவும், அது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் வந்த மற்ற தொழிலாளர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும் ஆந்திர போலீசார் கூறினர்.

    இதற்கிடையே 5 பேரின் உடல்களை சேலத்திற்கு கொண்டு வர வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், கீழ்நாடு ஊராட்சி வி.ஏ.ஓ. அனந்தகுமார் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் நேற்று கடப்பாவுக்கு சென்றனர்.

    கடப்பா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் 5 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட இலவச அமரர் ஊர்தி மூலம் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்களது உடல் சொந்த ஊரான கிராங்காடு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அப்போது தேசிய மலைவாழ் மக்கள் கட்சி நிர்வாகிகள் அமரர் ஊர்தி முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர்கள் ஆந்திரா போலீசார் 5 தொழிலாளர்களை கொலை செய்து ஏரியில் வீசியுள்ளனர்.

    இது குறித்து நீதி விசாரணை நடத்தி ஆந்திர அரசு மற்றும் ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கண்டன கோ‌ஷம் எழுப்பினர்.

    உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். உடனே சமாதானம் அடையாத அவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதையடுத்து 5 பேரின் உடல்களும் அமரர் ஊர்தியில் வைத்த படியே அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை பார்த்த இறந்த தொழிலாளிகளின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    அப்போது குடும்பத்தில் முக்கிய நபர்கள் இறந்துள்ளதால் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அழுது புலம்பினர்.

    பின்னர் 5 பேரின் உடல்களுக்கும் அவரவர் குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்து தனி தனியாக அந்த பகுதியில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து கிராங்காடு மற்றும் அடியானூர் பகுதிகளில் பரபரப்பு நிலவி வருவதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த நிதிக்கான காசோலையை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கலெக்டர் ரோகிணி இன்று மதியம் வழங்குகிறார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.  #tamilnews
    Next Story
    ×