search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 பெண் குழந்தைகளுடன் ரவி மற்றும் மனைவி சுமதி.
    X
    4 பெண் குழந்தைகளுடன் ரவி மற்றும் மனைவி சுமதி.

    எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாமல் 4 பெண் குழந்தைகளுடன் அவதிப்படும் பெற்றோர்

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அருகே எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாமல் 4 பெண் குழந்தைகளுடன் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அருகே ரவி(36) என்பவர் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், காயத்திரி, காவ்யா, சரசாள், ராசாத்தி என்ற நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர். ரவி மலசர் என்ற மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்.

    இவர் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியை ஒட்டிய மலையடிவார விவசாய தோட்டங்களில் கூலி வேலை செய்துவருகிறார்.

    இவருக்கும், இவரது குடும்பத்திற்கும் எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள கால்வாய் அருகே சிறிய குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள்.

    ரவி, அவரது மனைவிக்கு கல்வி அறிவு இல்லை. மேலும், வெளி உலகத்துடனும் தொடர்பு இல்லை. தாங்கள் கூலி வேலை செய்யும் சில விவசாயிகளை மட்டும் தெரிந்துவைத்துள்ளனர். மலைவாழ் இனத்தை சேர்ந்த ரவி தனக்கென குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நான்கு குழந்தைகளுக்கும் பிறப்பு சான்று இல்லை.

    பிறப்பு பதிவு இல்லை என எந்த விதமான பதிவுகளும், அடையாளங்களும் இல்லாமல் வசித்துவருகிறார். இதற்கு காரணம் இவரின் அறியாமை மட்டுமின்றி பிறர் யாருடனும் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. இதுவரை வாக்களிக்கவில்லை. மேலும், குழந்தைகள் நான்குமே தனது குடிசையிலேயே பிறந்ததாக கூறுகிறார். இப்படி, எந்த வித அடையாளும் இல்லாமல் வசித்துவந்தவரை ஆழியாறு பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமியும், சமூக ஆர்வலர் செல்வராஜ் என்பவரும் சந்தித்து பேசினர். ரவியின் அறியாமையை அறிந்த விவசாயி பழனிச்சாமி ரவியை குடும்பத்துடன் அழைத்து வந்து தனது தோட்டத்தில் குடிசை அமைத்துக்கொடுத்து தங்க வைத்துள்ளார். மேலும், ஆழியாறு மலைவாழ் மக்கள் பள்ளியில் சேர்க்க மூன்று குழந்தைகளை அழைத்துச்சென்றுள்ளார். ஆனால், பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் உட்பட எந்த விதமான அடையாள அட்டைகளும் இல்லாததால், பள்ளியின் தலைமை ஆசிரியர் குழப்பமடைந்தார். குழந்தைகளை எப்படி பள்ளியில் சேர்ப்பது என புரியாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள், கல்வி கற்றுத்தருகிறோம். ஆனால், விரைவில், சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவேண்டும். அப்போதுதான், முறைப்படி பள்ளியில் சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

    இப்படி, வெளி உலகம் தெரியாமலும், அடையாளமும் இல்லாமலும் வாழ்ந்துவரும் மலைவாழ் இன குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் கல்வி கற்கும் வயதை எட்டியும், சான்றிதழ்கள் ஏதும் இல்லாததால், கல்வி கற்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுதவிர அரசின் எந்த வித சலுகைகளும் கிடைக்கவில்லை. ரவியின் அறியாமையை கருத்தில்கொண்டு, அதிகாரிகள் அவருக்கு உதவி செய்து, குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க செய்யவேண்டும்.

    ரவி கூறுகையில், நான் பல ஆண்டுகளாகவே மலையடிவாரத்தில் குடிசை அமைத்து கால்வாய் ஓரத்தில் வசித்துவருகிறேன். காலை எழுந்துவுடன் கூலி வேலைக்கு சென்றுவிடு வேன். பிறகு மாலை குடிசைக்கு வந்துவிடுவேன். திருமணம் ஆன பிறகும் இதே நிலையில் வசித்துவருகிறேன். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை என தற்போது பலர் கூறுகிறார்கள். அதன் தேவை இல்லாமலே வாழ்ந்துவிட்டேன். ஆனால், தற்போது, குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிப்போனால், என்னென்னவோ கேட்கிறார்கள். அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை. ஆகவே அரசு எனக்கு உதவி செய்யவேண்டும் என்றார். #Tamilnews
    Next Story
    ×