search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு புழக்கம்: அன்பழகன் எம்.எல்.ஏ. புகார்
    X

    புதுவையில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு புழக்கம்: அன்பழகன் எம்.எல்.ஏ. புகார்

    புதுவை மாநிலத்தில் கடந்த 6 மாதமாக ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு தினந்தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக அன்பழகன் எம்.எல்.ஏ. புகார் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவைஅ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தங்கு தடையின்றி கள்ள லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவது போல் கடந்த 6 மாதமாக ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு தினந்தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திட்டமிட்டு ஒரு கூட்டம் கள்ள நோட்டை மாற்றி வருகின்றனர். வங்களில் செலுத்த செல்லும்போது தான் கள்ள நோட்டு என்று தெரிகிறது.

    தினந்தோறும் கடை வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கள்ளநோட்டுகள் குறித்து வங்கி அதிகாரிகள், தேசிய வங்கிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளநோட்டு கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது அரசின் வேலை.

    புதுவையில் முழுமையான பட்ஜெட் போட முதல்-அமைச்சர் நாராயணசாமி அக்கறை செலுத்தாமல், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே போட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். மத்திய அரசு பட்ஜெட்டில் புதுவைக்கு ரூ.1710 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதோடு புதுவை அரசின் வருவாயை சேர்த்து முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும்.

    ஆனால் அதற்கான எந்தவொறு முயற்சியிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஈடுபடவில்லை. முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததால் விரிவான விவாதங்களை சட்டசபையில் பேச முடியவில்லை. எனவே கவர்னர் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை தொடர்பாளர் போல் செயல்படுவதைவிட்டு புதுவை மாநில முதல்-அமைச்சராக நாராயணசாமி செயல்பட வேண்டும். தமிழகத்திற்கு சென்று தமிழக அரசை குற்றம்சாட்டுவதைவிட்டுவிட்டு புதுவை மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக எந்த திட்டங்களையும் முதல்-அமைச்சர் நாராயணசாமி செயல்படுத்தாமல் உள்ளார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி பொறுப்பு கடமையை உணர்ந்து இந்த ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை போடுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும்.

    புதுவை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் வாரிய தலைவர்களாக உள்ளனர். ஆதாயம் தரும் பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தானாக பதவி விலக வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி வருகிறோம். தற்போது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வாரிய பதவி வகிக்கும் எம்.எல்.ஏ.க்கள் ரூ.70 லட்சம் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஒருவார காலம் கெடு விதிக்கிறோம். அதற்குள் வாரியப்பதவிகளை ராஜினாமா செய்யாவிட்டால் கட்சி தலைமையில் அனுமதி பெற்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். #tamilnews
    Next Story
    ×