search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் ஏரிச்சாலையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட காட்சி
    X
    கொடைக்கானல் ஏரிச்சாலையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட காட்சி

    வனத்துறையினரை கண்டித்து கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

    கொடைக்கானலில் வனத்துறையினரை கண்டித்து வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தியதால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலை சேர்ந்த தனியார் விடுதி ஊழியர்கள் கடந்த வாரம் மேல்மலை கிராமமான மன்னவனூருக்கு சுற்றுலா சென்றனர். தடை செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் வந்ததாக கூறி வனத்துறையினர் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றிய நிலையில் விடுதி ஊழியர்கள் 12 பேரை அழைத்து சென்ற வனத்துறையினர் அவர்களை அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.



    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பாவி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி வணிகர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போர்குரல் எழுப்பினர்.

    இதனையடுத்து 2 பேரை மட்டும் பணியிடமாற்றம் செய்தும், தற்காலிக ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்தும் வன அதிகாரி உத்தரவிட்டார். மேலும் படுகாயம் அடைந்த விடுதி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வனத்துறையினரின் ஒருதலைபட்ச நடவடிக்கையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    அதன்படி இன்று கொடைக்கானலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள், டீக்கடைகள், உணவகங்கள் திறக்கப்படவில்லை. தெருக்களில் இருந்த ஒருசில டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    சாலையோரம் இருந்த கடைகளும் செயல்படாததால் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் தெரிவிக்கையில், வனத்துறையினரின் அடாவடித்தனம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதன் உச்ச வெளிப்பாடுதான் விடுதி ஊழியர்கள் மீது நடத்திய தாக்குதல். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தாலும் வெளியே தெரிவதில்லை. தற்போது 10-க்கும் மேற்பட்டவர்களை தாக்கி விட்டு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.



    இதுபோன்ற வன்முறை இனி நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் இந்த போராட்டம் வேறு வடிவத்தில் வெடிக்கும் என்று தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×