search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஷ்வந்துக்கு எதிராக போலீசார் திரட்டிய 42 ஆதாரங்கள்
    X

    தஷ்வந்துக்கு எதிராக போலீசார் திரட்டிய 42 ஆதாரங்கள்

    சிறுமி ஹாசினி வழக்கில் போலீசார் சேகரித்த 42 தடயங்கள் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பதற்கு பக்க பலமாக இருந்துள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியான தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் தீபாவளி போல பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

    அதே நேரத்தில் சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையிலும் அவளது குடும்பத்தினர் நிம்மதி இன்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட இந்த தூக்கு தண்டனை ஓரளவுக்கு அவர்களுக்கு ஆறுதல் அளித்திருப்பதாகவே அமைந்திருக்கும்.

    கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில்தான் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து எரித்துக் கொன்றான் தஷ்வந்த். சம்பவம் நடந்து ஓராண்டிற்குள் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுத்துள்ளனர் போலீசார்.

    ஹாசினி வழக்கில் போலீசார் சேகரித்த 42 தடயங்கள் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பதற்கு பக்க பலமாக இருந்துள்ளது. அதில் முக்கியமான தடயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

    மாங்காடு மவுலிவாக்கம் மாதா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மாயமான ஹாசினி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டதும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே போலீசார் விசாரணையை தொடங்கினர். அங்கிருந்த கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தஷ்வந்த் ஹெல்மெட் அணிந்தபடி பெரிய பையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. தஷ்வந்த் தூக்கிச் சென்ற பையில்தான் சிறுமி ஹாசினியின் உடலை மடக்கி வைத்திருந்துள்ளான்.

    பின்னர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது தம்பி ரஞ்சித்தின் வங்கி அட்டை மூலமாக 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி உள்ளான். அப்போது ஹெல்மெட்டை கழற்றி மீண்டும் மாட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    சிறுமி ஹாசினி எரித்துக் கொல்லப்பட்ட இடத்திலேயே, பெரிய பையை தஷ்வந்த் வீசி இருந்தான். அதில் ஹாசினி அணிந்திருந்த உள்ளாடையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தஷ்வந்த் வீட்டு படுக்கை அறை மெத்தையை பரிசோதனை செய்ததில் சேகரிக்கப்பட்ட ஹாசினியின் சிறுநீர் உள்ளிட்ட தடயங்களும் தஷ்வந்துக்கு எதிரான முக்கிய ஆதாரமாக மாறியது.

    பிரேத பரிசோதனையில் ஹாசினியின் உடலில் இருந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

    தஷ்வந்தின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் சிறுமிகளின் ஆபாச படங்கள் இருந்தன. இதன் மூலம் தஷ்வந்த் வக்கிர புத்தியுடன் வலம் வந்ததையும் போலீசார் உறுதி செய்தனர்.

    இப்படி போலீசார் திரட்டிய அத்தனை ஆதாரங்களும் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்துள்ளன.

    தனது வீட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்துக்கு ஹாசினியின் உடலை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றே தஷ்வந்த் எரித்துக் கொன்றான். அதுவேறு யாருக்கும் தெரியாத நிலையில் ஹாசினி காணாமல் போன அன்று அவளை தேடுவது போல தஷ்வந்த் நாடகமாடினான்.

    போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஹாசினி காணாமல் போன வி‌ஷயத்தை முதலில் கூறியதும் இவன்தான். பின்னர் சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிப்பதற்கும் தஷ்வந்தே கூட்டிச் சென்றான். ஆனால் மறுநாளே போலீசார் உஷாராகி தஷ்வந்தை கைது செய்தனர். அதே வேகத்தில் ஓராண்டில் தூக்கு தண்டனையையும் வாங்கி கொடுத்துள்ளனர்.

    இந்த வழக்கில் உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், விவேகானந்தன், கிருஷ்ணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், வேல்முருகன், ரவி ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். இவர்களை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினர். #Tamilnews
    Next Story
    ×