search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் முன்பு ரவுடி கேக் வெட்டியதையும், ரவுடிக்கு இன்ஸ்பெக்டர் கேக் ஊட்டியதையும் காணலாம்.
    X
    இன்ஸ்பெக்டர் முன்பு ரவுடி கேக் வெட்டியதையும், ரவுடிக்கு இன்ஸ்பெக்டர் கேக் ஊட்டியதையும் காணலாம்.

    ரவுடிக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

    சேலத்தில் ரவுடிக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
    சேலம்:

    சென்னை பூந்தமல்லி அருகே கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய 75 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் தப்பியோடிய கும்பல் தலைவன் பினு போலீசில் சரண் அடைந்தான்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை கண்காணித்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலத்தில் பிரபல ரவுடியின் பிறந்த நாள் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கேற்று அவருக்கு கேக் ஊட்டிய போட்டோக்கள் வெளியான சம்பவம் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்த பரபரப்பு சம்பவம் குறித்த முழு விவரம் வருமாறு:-

    சேலம் கொண்டப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது மாநகர போலீஸ் ஸ்டேசன்களில் கொலை வழக்கு உள்பட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பு பட்டியலில் இருந்து வந்தார். அ.தி.மு.க. பிரமுகரான இவர் ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். தற்போது மதுக்கடை பார் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ஏட்டு ஒருவர் மூலம் சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுடன், சுசீந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆளும் கட்சி என்ற தோரணையில் இன்ஸ்பெக்டர் நட்புடன் ஹாயாக சுசீந்திரன் வலம் வந்தார்.

    கடந்த 14-ந் தேதி சுசீந்திரன் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். நினைத்ததை போலீஸ் அதிகாரிகள் மூலம் சாதிக்கும் வகையில் இந்த விழா சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தே.மு.தி.க. பிரமுகர் சொக்கலிங்கம், இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஏட்டு ஏழுமலை உள்பட பலர் பங்கேற்றனர்.

    மகிழ்ச்சி வெள்ளத்தில் கேக் வெட்டிய சுசீந்திரனுக்கு இன்ஸ்பெக்டர் கருணாகரன் கேக் துண்டை வாயில் ஊட்டினார். பின்னர் ரவுடி கொடுக்கும் கேக்கை இன்ஸ்பெக்டர் வாங்கி சாப்பிடுகிறார்.இதை ரவுடியின் நண்பர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.

    இந்த போட்டோக்கள் நேற்று மாலை முதல் சேலத்தில் வாட்ஸ்-அப்பில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேலம் மாநகர போலீசார் தகவலை மாநகர கமி‌ஷனர் சங்கருக்கு தெரியபடுத்தினர்.

    சேலம் ரவுடிகளுடன் கைகோர்த்து சட்ட விரோத செயல்களுக்கு துணை போனதாக எழுந்த புகாரையடுத்து இன்ஸ்பெக்டர் கருணாகரணை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

    உடனே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு இன்று அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த முதல்வர் பாதுகாப்பு பணிகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் போலீசாரை கண்டால் அஞ்சி நடுங்கும் நிலை இருந்தால் குற்றச்செயல்கள் குறையும். ஆனால் அதற்கு மாறாக வேலியே பயிரை மேயும் வகையில் போலீஸ் அதிகாரிகளே ரவுடிகளுடன் இணைந்து செயல்பட்டால் குற்ற செயல்களை எப்படி தடுப்பார்கள். பொதுமக்களை இவர்கள் எப்படி ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுவார்கள் என்பது பொது மக்களின் கோடிக்கணக்கான கேள்வியாக உள்ளது.  #tamilnews

    Next Story
    ×