search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழித்துறை அரசு விடுதியில் மேலும் 9 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை
    X

    குழித்துறை அரசு விடுதியில் மேலும் 9 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை

    குழித்துறையில் அரசு ஆதி திராவிட மாணவர் விடுதியில் மேலும் 9 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டம் குழித்துறையில் அரசு ஆதி திராவிட மாணவர் விடுதி உள்ளது. மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவர் ஒருவர் காயங்களுடன் இருந்ததை பள்ளி ஆசிரியர் கண்டார். அவர் மாணவரிடம் காயத்திற்கான காரணம் குறித்து கேட்டபோது அந்த மாணவர், விடுதியின் சமையல் பணியாளர் தன்னை தாக்கியதாக கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், தாக்கியதற்கான காரணம் குறித்து கேட்டார். அதற்கு மாணவர், சமையல் பணியாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்குஉடன்பட மறுத்ததால், அந்த பணியாளர் தாக்கியதாகவும் கூறினார்.

    இது பற்றி ஆசிரியர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து அதிகாரிகள் உடனடியாக விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் விடுதியின் சமையல் பணியாளர் விஸ்வாம்பரன், உதவியாளர் வில்சன் ஆகியோர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசாரும் தனியாக விசாரணை நடத்தினர். இதில் விஸ்வாம்பரன், வில்சன் இருவரும் விடுதியில் இருந்த 8 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவர் மீதும் போஸ்கோ சட்டப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் சமையல் பணியாளர் விஸ்வாம்பரன் கைது செய்யப்பட்டார். வில்சன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே விஸ்வாம்பரன்,வில்சன் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் குழித்துறை அரசு மாணவர் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு குழித்துறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் மன நல ஆலோசனை மற்றும் சிறப்பு கவுன்சிலிங் வழங்கினர்.

    அப்போது விடுதியில் உள்ள மேலும் 9 மாணவர்களுக்கு விஸ்வாம்பரன், வில்சன் இருவரும் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதா, மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புதிய புகார் அளித்தார்.

    அதில் குழித்துறை விடுதியில் தங்கியிருந்த 17 மாணவர்களுக்கு விஸ்வாம்பரன், வில்சன் இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் ஏ.எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் மேலும் ஒரு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×