search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து எனது பயணம் தொடரும்- ஜெ.தீபா ஆவேசம்
    X

    எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து எனது பயணம் தொடரும்- ஜெ.தீபா ஆவேசம்

    என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அதை தகர்த்தெறிந்து துணிச்சலுடன் பயணம் தொடரும் என சேலத்தில் தீபா ஆவேசமாக பேசியுள்ளார். #jdeepa #jayalalitha

    சேலம்:

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.

    கூட்டத்தில் ஜெ.தீபா கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., அண்ணாவால் தான் அரசியலுக்கு வந்தார். ஆனால், என்னை அரசியலுக்கு வரச்செய்தவர்கள் மக்களாகிய நீங்கள்தான். எனக்கு சுயநலம் என்று எதுவும் கிடையாது. எனது அத்தை ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

    என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அதை தகர்த்தெறிந்து துணிச்சலுடன் பயணம் தொடரும். அதில் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன். எனது லட்சியம் வென்றிட நிச்சயமாக நீங்களெல்லாம் உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள், உண்மைகள் வெளியே வரவேண்டும் என்றால் போயஸ் கார்டனை முற்றுகையிட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை வைப்போம். தற்போது ஆளும் அரசு, ஆட்சி-அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை முடக்கி வருகிறது.

    காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு வழக்கை முறையாக கையாள உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இதனால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்காக மத்திய அரசு உரிய வழிமுறைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தர்மபுரி மாவட்ட செயலாளர் பச்சியப்பன், பொருளாளர் மாதையன், அவைத்தலைவர் முருகேசன், துணை செயலாளர் ஏழுமலை, மற்றும் நிர்வாகி வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். #tamilnews #jdeepa #jayalalitha

    Next Story
    ×