search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருதலைக்காதலில் விபரீதம் - மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
    X

    ஒருதலைக்காதலில் விபரீதம் - மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒருதலைக்காதலில் மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ராதேவி (வயது14). 9-ம் வகுப்பு மாணவி.



    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்குச் செல்ல மாணவி சித்ராதேவி ஷேர் ஆட்டோவுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடினார்.

    தீயில் கருகிய மாணவி சித்ராதேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் ஒருதலைக்காதலால் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

    மாணவியின் ஊரான நடுவக்கோட்டையை சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாலமுருகன் (26) என்ற வாலிபர் தான் சித்ராதேவி மீது தீ வைத்து உள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார்.

    தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த பாலமுருகன் காதலை சொன்னபோது சித்ராதேவி மறுத்து விட்டார். மேலும் தனது பெற்றோரிடமும் தெரிவிக்க, அவர்கள் பாலமுருகனை கண்டித்தனர்.

    ஆனாலும் பாலமுருகன் மாறவில்லை. சித்ரா தேவியை பின்தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். கொலை மிரட்டல், தற்கொலை மிரட்டல் என பல வழிகளை அவர் கையாண்டும், சித்ராதேவி திரும்பி பார்க்கவில்லை. மாறாக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி பாலமுருகனை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அவன், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தான். காதலை ஏற்க மறுத்ததோடு, கைது நடவடிக்கைக்கும் காரணமான சித்ராதேவியை பழி வாங்கும் நோக்கத்தில் பெட்ரோல் ஊற்றி வைத்து விட்டு தப்பி ஓடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    தப்பி ஓடிய பாலமுருகனை பிடிக்க, துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட் டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி புதுப்பட்டி ஆயிரம் கண்ணுடையார் கோவில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகனை இன்று காலை கைது செய்தனர்.

    திருமங்கலம் அருகே மாணவிகள் மீது தாக்குதல் சம்பவம் நடப்பது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி திருமங்கலம் சின்னபூலாம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த கல்லூரி மாணவிகள் மீனா, அங்காளஈஸ்வரி மீது ஆசிட் வீசப்பட்டது. இதுவும் ஒருதலைக்காதலால் ஏற்பட்ட விபரீத செயல் தான். அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சித்ராதேவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டுள்ளது.  #tamilnews
    Next Story
    ×