search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. அரசு தமிழக நலனுக்கு எதுவும் செய்ய வில்லை- கனிமொழி குற்றச்சாட்டு
    X

    அ.தி.மு.க. அரசு தமிழக நலனுக்கு எதுவும் செய்ய வில்லை- கனிமொழி குற்றச்சாட்டு

    மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறும் அ.தி.மு.க .அரசு தமிழக நலனுக்கு எதுவும் செய்ய வில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi

    கடலூர்:

    பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் நடந்தது.

    கூட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா வரவேற்றார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.கி.சரவணன், சபா.ராஜேந்திரன், கணேசன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் முல்லைவேந்தன், பால.அறவாழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மனித நேய மக்கள் மாவட்ட தலைவர் ஷேக்தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராஜாரஹிமுல்லா, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதே மேடையை கடந்த தேர்தலுக்கு முன்னால் அமைத்து இருந்தால் இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கே அவசியம் இருந்திருக்காது. இத்தனை போராட்டங்களை தமிழ்நாடு சந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி இருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

    தர்மயுத்தத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் தனக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் அதை விட்டுவிட்டார். தலைநிமிர்ந்து நிற்க வேண்டிய தமிழ்நாடு தற்போது தலைகுனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

    இந்த அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக உள்ளது. பஸ் கட்டணத்தை உயர்த்தினால் ரூ.38 கோடி லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது தமிழக அரசு. ஆனால் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.28 கோடி தான் வசூல் ஆகி இருக்கிறது.

    தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று கூறும் அ.தி.மு.க.வினரால் தமிழகத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரியை கூட கொண்டு வர முடியவில்லை. நீட் தேர்வை தள்ளி வைக்க முடிந்ததா? தமிழை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக கொண்டு வர முடியவில்லை.

    படித்த இளைஞர்களை பக்கோடா விற்க சொல்வது தான் பிரதமருக்கு அழகா?. இது தான் ஆட்சியா?

    தமிழ், சுயமரியாதை, பகுத்தறிவு என்று பேசினால் அதனை தேசதுரோகம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நினைத்தால் 3 நாட்களில் எந்த பகை நாட்டையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால் இந்திய ராணுவம் போருக்கு தயாராக 6 மாதங்கள் ஆகும் என்று கூறி ராணுவத்தை அவமானப்படுத்தி உள்ளார். அவர் கூறுவது, பகை நாட்டையா, இந்தியாவுக்குள்ளே போராடவா? சிறுபான்மையினருக்கு எதிராகவா? இந்த அளவுக்கு எப்படி பயிற்சி பெற்றார்கள், இதை எப்படி மத்திய அரசு அனுமதித்தது. மோகன்பகவத் கருத்துக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்.

    நாம் போராடி பெற்றது வாக்குரிமை. அதை யாருக்கும் அடகு வைத்து விடாதீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வர அதை பயன்படுத்துங்கள்.

    முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மணி வாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், காங்கிரஸ் கட்சி வக்கீல் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். #tamilnews #kanimozhi

    Next Story
    ×