search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணைவேந்தர் கணபதியிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
    X

    துணைவேந்தர் கணபதியிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி

    லஞ்ச குற்றச்சாட்டில் கைதான துணைவேந்தர் கணபதி, மறைத்து வைத்துள்ள 4 காசோலைகளை பறிமுதல் செய்வதற்காக அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
    கோவை:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

    துணைவேந்தரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் லஞ்ச ஒழிப்பு விசாரணை சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று நீதிபதி ஜான் மினோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கணபதி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜான்மினோ முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது கோர்ட்டில் நடைபெற்ற விவாத விவரம் வருமாறு:-

    நீதிபதி:- போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்துள்ளனர். நீங்கள் இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?

    கணபதி:- நான் ஏற்கனவே விசாரணையில் விவரங்களை தெரிவித்துவிட்டேன். எனவே போலீஸ் காவலில் விசாரணைக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சி.ராஜேஷ், சத்திய பிரமாண வாக்குமூலத்தை நீதிபதி முன்னிலையில் அளித்தார். அவர் அளித்த சத்திய பிரமாண வாக்குமூல விவரம் வருமாறு:-

    இந்த வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரமான 4 காசோலைகள் அவரது வீட்டில் இருந்து இன்னும் கண்டெடுக்கப்படவில்லை. இது குறித்து துணைவேந்தரிடம் கேட்டபோது, காசோலை வாங்கியதை மறுக்கவில்லை. அந்த காசோலைகள் வீட்டில் எங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்க மறுக்கிறார். எனவே இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டியது இருப்பதால் அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தை துணைசூப்பிரண்டு ராஜேஷ் அளித்தார்.

    பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜான்மினோ துணைவேந்தர் கணபதியை வருகிற 16-ந்தேதி மாலை வரை போலீசார் காவலில் விசாரிக்க அனுமதிப்பதாக கூறினார்.

    இதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணபதியை, கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    சிறையில் துணைவேந்தருக்கு முதல் வகுப்பு சலுகை அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(செவ்வாய்க்கிழமை) இந்த கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.  #tamilnews
    Next Story
    ×